Last Updated : 27 Jun, 2020 05:35 PM

 

Published : 27 Jun 2020 05:35 PM
Last Updated : 27 Jun 2020 05:35 PM

தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 8 மாநிலங்களில் 85 சதவீத கரோனா நோயாளிகள்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில்தான் நாட்டின் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் 85 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 6 நாட்களில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இந்தியாவில் கரோனாவால் 2 லட்சத்து 99 ஆயிரத்து 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்புக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கரோனா தடுப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 17-வது முறையாக ஆய்வு நடத்தியது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''நாட்டில் உள்ள கரோனா நோயாளிகளில் 85 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலங்கானா, குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில்தான் இருக்கின்றனர். கரோனாவுக்குச் சிகிச்சை எடுத்துவரும் நோயாளிகளில் 85.5 சதவீதம் பேரும் இந்த 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். இந்த 8 மாநிலங்களில் இருந்துதான் 87 சதவீத கரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவிடம் கரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் அதிகரித்து வருவது, பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம், பல்வேறு மாநிலங்களில் பரிசோதனையைத் தீவிரப்படுத்தி வருவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவ 15 மத்திய சுகாதாரக் குழுவினர், தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள், மருத்துவ வல்லுநர்கள் குழு அனுப்பிவைக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

ஹாட் ஸ்பாட் பகுதியில் நோயாளிகளைக் கண்டுபிடிக்கவும், அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களையும் அறிய ஆரோக்கிய சேது செயலி பயன்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், பரிசோதனையை முழுவீச்சில் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பரிசோதனைக்காக 2 லட்சத்து 20 ஆயிரத்து 479 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 79 லட்சத்து 96 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 1,206 கரோனா பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இதில் 741 ஆய்வகங்கள் அரசுத் தரப்பிலும், 285 ஆய்வகங்கள் தனியார் வசமாகவும் இருக்கின்றன.

கரோனா நோயாளிகளுக்காகவே 1,039 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 275 படுக்கைகள், 22 ஆயிரத்து 920 ஐசியு படுக்கைகள், 77 ஆயிரத்து 268 ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன.

2,398 கோவிட் சுகதாார மையத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 483 படுக்கைகள் உள்ளன, 11ஆயிரத்து 539 ஐசியு படுக்கைகள், 51 ஆயிரத்து 321 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருக்கின்றன.

8,958 கோவிட் பராமரிப்பு மையத்தில் 8 லட்சத்தில் 10 ஆயிரத்து 621 படுக்கைகள் இருக்கின்றன. 1.85 கோடி என்95 முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளன. 1.16 கோடி பிபிஇ கவசஉடைகள் வழங்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x