

2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் அண்டை நாடுகளுடன் நம் நாடு வைத்திருந்த உறவு மோசமடைந்ததற்கான காரணம் என்ன என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால், இந்தியா மறுத்து வருகிறது.
இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால், சீன ராணுவம் இந்திய நிலைகள் எதையும் ஆக்கிரமிக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இரு கட்சிகளும் தொடர்ந்து எல்லை விவகாரம் தொடர்பாக சூடான கருத்துகளைப் பரிமாறி வருகின்றனர்
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியாதவது:
''கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே என்ன நடந்தது, ஏன் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள் என்பது குறித்து எந்தவிதமான தெளிவான அறிக்கையும் இல்லை. இந்தப் பிரச்சினையில் உள்ள குழப்பத்தை பிரதமர் மோடி மக்களுக்கு விளக்க வேண்டும்.
2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் நம்முடைய அண்டை நாடுகளுடன் நாம் வைத்திருந்த உறவு மோசமடைந்துவிட்டது. இதற்கான காரணம் என்ன?.
பிரதமராக மோடி பதவி ஏற்றபின், அண்டை நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார்கள். அந்தத் தலைவர்களும் வந்தார்கள். ஆனால், இப்போது திடீரென அண்டை நாடுகளுடனான இலங்கை, நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நாம் வைத்திருந்த நட்புறவு திடீரென மோசமடைந்து நமக்கு எதிராக அந்த நாடுகள் திரும்பக் காரணம் என்ன? சீனாவுடன் என்ன நடந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.
மக்களுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்ட வேண்டும். ஆனால், மத்திய அரசு மக்கள் முன் வைத்த உண்மைகள் அனைத்தும் சீனாவால் வரவேற்கப்பட்டதுதான் துரதிர்ஷ்டமாகும். அப்படியென்றால் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும்.
ஆனால், இதுவரை மத்திய அரசு சார்பில் எந்தவிதமான உரிய விளக்கமும் இல்லை. இந்தியாவில் சீனாவுக்கு எதிராக அதிருப்தி இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும், நாளை பிரதமர் மோடி மக்களுக்கு உண்மையைக் கூறுவார். மறைப்பது எந்த வேலைக்கும் உதவாது. அரசு எதை மறைக்க முயல்கிறது. கடந்த 1962-ம் ஆண்டு சீனப் போருக்குப் பின் இந்தியா இன்று சூப்பர் பவர் நாட்டுக்குக் குறைவில்லாமல் இருக்கிறது''.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.