

மத்திய அரசு தற்போதுள்ள சூழவில் நிதிப்பற்றாக்குறை மீதோ, பொதுக்கடன் அதிகரிப்பிலோ கவனம் செலுத்தத் தேவையில்லை. அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீண்டெழுவதற்கான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று 15-வது நிதி ஆணையத் தலைவர் என்.கே.சிங் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்
டெல்லியில் நேற்று நடந்த பொருளதாார ஆலோசனைக் கவுன்சில் கூட்டத்தில் 15-வது நிதி ஆணையத் தலைவர் என்.கே.சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டத்துக்குப் பின், என்.கே.சிங் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நாம் நினைத்துபோல, ஏற்கெனவே மதிப்பிட்டதுபோல பொருளாதார வளர்ச்சியும், வரி வருவாயும் இந்த ஆண்டு இருக்கப் போவதில்லை. நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியிடம் அதிகமாக கடன் வாங்கி இருக்கிறது. மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுகின்றன.
கரோனா வைரஸ் பெருந்தொற்றால் கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனால் பொருளாதாரம் சிக்கலாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் மத்திய அரசு நிதிப்பற்றார்குறை பற்றியோ, அதிகரித்துவரும் பொதுக்கடன் பற்றியோ பேசிக்கொண்டிருக்கும் நேரமில்லை. இந்த நேரத்தில் உலகம் இதைத்தான் நம்புகிறது
நான் என்ன நினைக்கிறேன் என்றால், செலவுகளைக் காட்டிலும் நிதிப்பற்றாக்குறையைப் பாதுகாக்க வேண்டும். அதைத்தான் மத்திய அரசு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பணம், மற்றும் நிதி ஆகியவை எங்கு செல்ல வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசோ நடப்பு ஆண்டு குறித்தும் அடுத்த நிதியாண்டு குறித்தும் விழிப்புடன்தான் இருக்கிறது. பொருளாதாரத்தை இயல்புப்பாதைக்குக் கொண்டுவருவது, நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்வது, பொதுக்கடனைக் குறைப்பது குறித்து ஒவ்வொருவரும் விழிப்புடன்தான் இருந்து வருகிறார்கள்
ஆனால், இந்த ஆண்டு நாம் நிதிப்பற்றாக்குறை அல்லது பொதுக்கடன் குறித்து கண்டிப்பாக கவனம் செலுத்தக் கூடாது. நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மீண்டெழச்செய்ய தேவையானவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ரேட்டிங் ஏஜென்சிகள் நடப்பு ஆண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 11 முதல் 12 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணித்துள்ளன.
ஆனால், என்னைப் பொறுத்தவரை நிதிப்பற்றாக்குறை எங்குபோய் முடியும் என இப்போது கூற முடியாது. கரோனா வைரஸ் மட்டும் முழுமையான காரணம் என்றும் கூறி ஒதுக்கிவிட முடியாது''.
இவ்வாறு என்.கே. சிங் தெரிவித்தார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் லாக்டவுன் காரணமாக வரிவருவாய் குறைந்ததால், பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள நிதிப்பற்றாக்குறையில் 78 சதவீதத்தை அடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.