

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீங்கள் தரும் ஆலோசனை என்ன என்று கேட்ட போது அவர் கூறியதாவது:
நேரடி பண உதவி உள்ளிட்ட சலுகைகளை ஏழை மக்களுக்கு அளிக்கலாம். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளைமேற்கொள்ளலாம். இவற்றுடன்சீர்திருத்தங்களை வலுப்படுத்துவதற்கு இது உரிய காலம். அதை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கீழ் நிலையில் இருக்கும். மக்களின் சுகாதாரத்தை நன்கு கவனித்து அதிலிருந்து இந்தியா மீளவேண்டும். உலக பொருளாதார சூழல் சரிவிலிருந்து மீளும் போது இந்தியாவின் பொருளாதார நிலையும் உயரும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிதத்துக்கும் அதிகமாக இருக்கும். இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று குறிப்பிட முடியாது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இத்தகைய வளர்ச்சிதான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான வளர்ச்சி சீனாவில் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. ஏப்ரல் மாத வளர்ச்சி ஒரு சதவீதமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் காணப்படும் வளர்ச்சி அளவுக்கு பிற நாடுகளிலும் எதிர்பார்க்க முடியாது என்றார். அந்நாட்டின் வளர்ச்சி ஸ்திரமாக உறுதியானதாக உள்ளது. இதன் காரணமாகவே கரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கையில் இருந்து அவர்கள் மீண்டெழுந்து வருகின்றனர் என்றார்.
கடந்த 1930-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையை விட மிக மோசமான பொருளாதார சூழல் நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு சர்வதேச அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தி குறையும் என்று சுட்டிக் காட்டினார்.