Published : 26 Jun 2020 06:07 PM
Last Updated : 26 Jun 2020 06:07 PM

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாயப்பு வழங்கும் மெகா திட்டம்: உ.பி.யிலும் தொடக்கம்

சுயசார்பு உத்தரப்பிரதேசம் என்ற இலக்கின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

சுயசார்பு உத்தரப்பிரதேசம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர். நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் கீழ், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கடந்து செல்ல ஒவ்வொருவராலும் இயலும் என்று கூறினார். இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, முகத்தை முகக்கவசத்தால் மூடிக்கொள்வது மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கை என்று அவர் கூறினார்.

தொற்று பரவி வரும் சூழலில், மக்களை ஊக்கப்படுத்தி, இந்தப் பேரிடரை ஒரு வாய்ப்பாக உத்தரப்பிரதேசம் மாற்றியிருக்கும் விதம் குறித்து பிரதமர் மனநிறைவை வெளியிட்டார். மற்ற மாநிலங்கள், சுயசார்பு உத்தரப்பிரதேச வேலைவாய்ப்பு திட்டம் குறித்த பல அம்சங்களைக் கற்கும் என்றும், இவற்றினால் அவை ஊக்கம் பெறும் என்றும் அவர் கூறினார்.

உலகில் மிகப் பெரிய சிக்கலை கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம் துணிச்சலையும், அறிவுடைமையையும் காட்டியிருப்பதாக பிரதமர் புகழ்ந்துரைத்தார். இந்தச் சூழ்நிலையை முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு, வெற்றி பெற்றிருப்பது பாரட்டத்தக்கது என அவர் கூறினார்.

உ.பி.யில் மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை, ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள், வங்கிகள், அஞ்சலகங்கள் , போக்குவரத்து சேவை, தொழிலாளர்கள் ஆகியோரின் பங்களிப்பை பிரதமர் போற்றிப் பாராட்டினார்.

நூற்றுக்கணக்கான ஷ்ராமிக் விரைவு ரயில்களை இயக்க வைத்து, உ.பி. யைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மாநிலத்துக்கு மீண்டும் அழைத்து வந்த மாநில அரசைப் பிரதமர் புகழ்ந்துரைத்தார்.

நாடு முழுவதும் பரவியிருந்த 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களில் உ.பி.க்கு திரும்பி வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த நிலையின் தீவிரத்தை உ.பி. முதல்வர் நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், அவரது அரசு இதற்குத் தீர்வு காண, போர்க்கால அடிப்படையில் பணியாற்றியிருப்பதாகப் பிரதமர் கூறினார்.

ஏழை மக்கள் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், உ.பி. அரசு முன்னெப்போதும் காணாத வகையில் உழைத்திருப்பதாக பிரதமர் பாராட்டினார். பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ், உ.பி. அரசு தீவிரமாகச் செயல்பட்டு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோருக்கு இலவச ரேசன் பொருள்களை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இது தவிர, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய், உ.பி.யின் 75 லட்சம் ஏழைப் பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஏழைகள் வேலைவாய்ப்பு இயக்கத்தைச் செயல்படுத்துவது போல, சுயசார்பு என்னும் இயக்கப் பாதையில் வேகமாகப் பயணிக்கும் வகையில், உத்தரப்பிரதேசம் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். தொழிலாளர்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், ஏழைகள் வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், கிராமங்களில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஊரகப்பகுதி மேம்பாடு தொடர்பான திட்டங்களின் கீழ், குறு, சிறு, நடுத்தரத் தொழில் அலகுகளில் சுமார் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், இது மேலே கூறிய வேலைவாய்ப்பு திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார். இவை தவிர, ஆயிரக்கணக்கான பேருக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், முத்ரா திட்டத்தின் கீழ்,ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுயசார்பு வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு ஊக்கமளிக்கும் தொழிற்சாலைத் தொகுப்புகள் உருவாக்கப்படும் போது, உ.பி. மகத்தான பயனைப்பெறும் என்று திரு. மோடி கூறினார்.

சட்டத்தின் கீழ், ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் வகையில், விவசாயத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்திர்த்தங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போது, விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், விவசாயி தனது பொருளை விதைக்கும் போதே அதற்கான விலையை நிர்ணயிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நமது கால்நடைகளைப் பராமரிப்பதற்கான பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், கால்நடை மற்றும் பால் பண்ணைத் தொழில்களுக்கு என ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு கட்டமைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவித்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புத்தமத சுற்றுலாவை மேம்படுத்துவதில் இது முக்கியத்துவம் பெறும் என்று கூறினார்.

பூர்வாஞ்சலில், விமானப்போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்தியிருப்பதால், நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மகாத்மா புத்தரின் கோடிக்கணக்கான பக்தர்கள் எளிதாக உ.பி.யை அடைய முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் ஏழைகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், உ.பி. திறந்தவெளிக் கழிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். உ.பி. அரசு 3 லட்சம் இளைஞர்களுக்கு வெளிப்படையான முறையில், வேலை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில், குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கிய மோடி, பூர்வாஞ்சலில் ஏராளமான நோயாளிகள் மூளை வீக்க நோயிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் எவ்வாறு 90 சதவீதம் குணமடைந்தனர் என்று விளக்கினார்.

மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

கோண்டாவைச் சேர்ந்த சுய உதவிக் குழுத் தலைவர் வினீதா பால், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் பயனாளியான பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.திலக் ராம், சந்த் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமரேந்திர குமார் போன்ற பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மும்பையிலிருந்து திரும்பி வந்த குர்பான் அலி, கோர்க்காபூர் மாவட்டத்திலிருந்து வந்த திரு. நாகேந்திர சிங், ஜலாவுன் மாவட்டத்திலிருந்து வந்த திரு. தீபு உள்ளிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x