

வடகிழக்கு மாநிலங்களில் கரோனா பரவல் சற்று குறைவாக உள்ளபோதிலும் அங்கு போதிய மருத்துவ கட்டமைப்புகள் இல்லாத சூழலில் அதனை ஏற்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டம் உறுதியுடனும், ஒன்றிணைந்தும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்த மத்திய அரசு தாமாக முன்வந்து பெரிதும் உதவுகிறது.
நாட்டின் பிறபகுதிகளுடன் ஒப்பிடும்போது வடகிழக்கு மாநிலங்களில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு. 3,731 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5,715 பேர் இந்தத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இத்தொற்றால் இறந்தவர்களின் விகிதம், இங்கு மிகக் குறைவாகவே இருக்கிறது. மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரு இறப்புக்கூட இல்லை.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, கொவிட்-19 பரிசோதனை வசதிகள் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய தடைக்கல்லாக இருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் தொடர் கவனத்தின் விளைவாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையால் 42 பரிசோதனை மையங்கள் இந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 39 பொதுத்துறை மற்றும் மூன்று தனியார் துறை பரிசோதனைச் மையங்கள் ஆகும்.
துவக்கத்தில், கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி மருத்துவமனைகள், கொவிட் சுகாதார மையங்கள் மற்றும் கொவிட் கவனிப்பு மையங்கள், இந்த மாநிலங்களில் இல்லை. தற்போது மத்திய அரசின் உதவியுடன், அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், தனிமை படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற அனைத்து வசதிகளையும் மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களில் செய்து கொடுத்துள்ளது.