

உ.பி.யில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, கரோனா வைரஸ் பரவலைத் தடுத்த விதம், தயாரிப்பு நிலை ஆகியவைபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை பாராட்டிப் பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:
யோகிஜியும் அவரது குழுவினரும் சரியான தயாரிப்பு நிலையில் இல்லையெனில் அமெரிக்கா போன்று உத்தரப் பிரதேசமும் பேரழிவை சந்தித்திருக்கும். இப்போது உள்ள எண்ணிக்கையான 600 அல்ல, சுமார் 85,000 உயிர்கள் பலியாகியிருக்கும் .
நவீன தொழில்நுட்பம் இருந்தும் அமெரிக்கா கோவிட்-19-னால் பேரழிவைச் சந்தித்து வருகிறது. 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒப்பிடுகையில் உ.பியி. 600 பேர்தான் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகை உ.பியில் உள்ளது போல் இருக்கும். உ.பியில் 24 கோடி மக்கள் இருக்கின்றனர். இந்த 4 நாடுகளில் கரோனா உயிரிழப்புகள் 1.30 லட்சம் என்று கணக்கிடப்பட்டால் உ.பியில் 600 மட்டுமே.
இந்த 4 நாடுகள் வளர்ந்த நாடுகள் என்ற போதிலும் உ.பி.அளவுக்கு கரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை, உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை.
இது போன்ற ஒன்றை முந்தைய மாநில அரசுகளிடம் எதிர்பார்த்திருக்க முடியாது. இது பற்றிய ஒரு உணர்வுடன் யோகி அரசு செயல்பட்டதால் மாநிலத்தை பேரபாயத்திலிருந்து மீட்டுள்ளது.
முந்தைய ஆட்சிகள் என்ன செய்திருக்கும் மருத்துவமனைகள் எண்ணிக்கை,படுக்கை வசதிகள் என்று சாக்குபோக்குகள் கூறி சவாலை தவிர்த்திருப்பார்கள். ஆனால் யோகிஜி சூழ்நிலையின் தீவிரத்தை நன்கு உணர்ந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டார்.
உ.பி. செய்தது உலகிற்கே ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.