

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கடைசி புத்தகத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்த பெண் மொழிபெயர்ப்பாளருக்கு புத்தக வெளியீட்டு விழாவில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் எழுந்த எதிர்ப்பின் காரணமாக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியே திருச்சூரில் ரத்து ஆனது.
அப்துல் கலாமின் கடைசி புத்தகமான ‘Transcendence – My Spiritual Experience with Pramukh Swamiji’ என்பதை ஸ்ரீதேவி கர்த்தா என்ற பெண் மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இதனை கரண்ட் புக்ஸ் வெளியீட்டு நிறுவனம் 'காலாதீதம்' என்ற தலைப்பில் கொணர்ந்தது.
அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா திருச்சூரில் இன்று கேரள சாகித்ய அகாடமி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது.
புத்தகத்தின் முதல் பதிப்பை பெற சுவாமி பிரம்மவிஹாரி தாஸ்ஜி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்துல் கலாம் தனது கடைசி புத்தகத்தில் எழுதிய பிரமுக் சாமிஜியின் பிரதிநிதியாக சுவாமி பிரம்மவிஹாரி தாஸ்ஜி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இவர் பெண்மணிக்கு அருகில் மேடையில் உட்கார மறுப்பு தெரிவித்தார். இதனால் மொழிபெயர்த்த ஸ்ரீதேவி கர்த்தாவை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. புத்தகத்தின் இணை-ஆசிரியர் அருண் திவாரி அழைக்கப்பட்டுள்ளார்.
பிரம்மவிஹாரி தாஸ்ஜி பெண் இருக்கும் மேடையில் தான் அமர முடியாது என்று மறுத்ததையடுத்து கரண்ட் புக்ஸ், ஸ்ரீதேவி கர்த்தாவை விழாவுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.
இதனை அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்ட போது, “வெளியீட்டு நிறுவனம் என்னை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்தது. பிரமுக் சாமிஜியின் ஆஸ்ரமத்தாரின் விசித்திரமான கோரிக்கைக்கு செவிசாய்த்து இதனை அவர்கள் செய்துள்ளனர். ஆசிரமத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மேடையில் பெண் இருக்கக்கூடாதாம். மேலும் அரங்கத்தின் முதல் 3 வரிசைகள் ஆசிரமத்தின் ஆண் அங்கத்தினர்களுக்கு மட்டுமே உரித்தானதாக ஒதுக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு அங்கு இடமில்லை” என்று பதிவிட்டிருந்தார். புத்தக வெளியீட்டு விழா குறித்த அழைப்பிதழில் கூட மொழிபெயர்த்த ஸ்ரீதேவி கர்த்தா பெயர் இல்லை.
இதனையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே பெண்களும் மாணவ மாணவிகளும் குவிந்து ஆர்பாட்டம் செய்தனர். இவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து ‘கலாச்சார பாசிசம்’ என்று கோஷமிட்டனர். ஆர்பாட்டக்காரர்களில் சிலர் மேடைக்குச் சென்று மைக்கில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மகிளா சங்கம், வனித கால சஹிதி, சமதா, ஏ.ஐ.எஸ்.எஃப், எஸ்.எஃப்.ஐ., டி.ஒய்.எஃப்.ஐ. ஆகியோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கரண்ட் புத்தக நிறுவனம் பெண் மொழிபெயர்ப்பாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டத்தை கேள்விப்பட்ட சுவாமிஜி முதல் பிரதியை பெற்று கொள்ள நிகழ்ச்சிக்கு வர மறுத்து விட்டதையடுத்து எழுத்தாளர் சாரா ஜோசப்பை முதல் பிரதியை பெற அழைத்தனர். இவரும் புத்தக வெளியீட்டாளர்களுக்கு ஆதரவாக பேச, போராட்டக்காரர்கள் இவரையும் எதிர்த்தனர்.
ஒருநிலையில் சூழ்நிலை கட்டுக்கடங்காமல் செல்ல கரண்ட் புக்ஸ் நிறுவனம் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது. கரண்ட் புக்ஸ் நிறுவன மேலாளர், கே.ஜே.ஜானி பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, நிகழ்ச்சி ரத்துக்காகவும் ஸ்ரீதேவி கர்தா கொடுத்த மன உளைச்சலுக்காகவும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.