

2019-ம் ஆண்டு முடிவில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்திற்கான இடத்தில் இந்தியா 3 இடங்கள் முன்னேறி 77வது இடத்தில் உள்ளது, இதற்கு முந்தைய ஆண்டு 74ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையும் சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் கருப்புப் பணத்தையும் குழப்பிக் கொள்ளக்கூடாது, இது வேறு, அது வேறு.
இதில் பிரிட்டன் முதலிடம் வகிக்கிறது, அதாவது அதிக பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பவர்களில் பிரிட்டன் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட புள்ளிவிவரக் கணக்கில் இந்தியாவின் இடம் மிகமிகக் குறைந்து பின்னால் உள்ளது. மொத்த சுவிஸ் வங்கி அயல்நாட்டு பணத்தில் இந்தியர்கள் வைத்துள்ள தொகை 0.06% என்பதாக நன்றாகக் குறைந்துள்ளது.
ஆனால் மொத்த அயல்நாட்டு வங்கிக்கணக்குப் பணத்தில் 27% பிரிட்டன் பங்களிப்பு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள கிளைகள் உட்பட சுவிஸ் வங்கிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2019-ல் 5.8% குறைந்துள்ளது. அதாவது ரூ.6,625 கோடியாக குறைந்துள்ளது.
இது சுவிஸ் வங்கிகளில் அதிகாரப்பூர்வமாக கணக்கு வைத்துள்ளவர்கள் குறித்த விவரம் என்பது குறிப்பிடத்தக்கது, சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்படும் கருப்புப் பணம் பற்றிய புள்ளிவிவரம் அல்ல இது என்பதை கருத்தில் கொள்வது நல்லது. மேலும் இதில் அயல் நாட்டு வாழ் இந்தியர்கள், மற்று பிற இந்தியர்கள் பிற வெளிநாட்டு நிறுவனங்கள், பெயர்களில் வைத்திருக்கும் கணக்குகளும் தொகைகளும் கூட இந்தப் புள்ளிவிவரத்தில் அடங்காததாகும்.
இந்தப் பட்டியலில் யுகே முதலிடம் அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பிரான்ஸ், ஹாங்காங், ஆகியவை டாப் 5இல் உள்ளன.
சுவிஸ் வங்கியில் மொத்த அயல்நாட்டுத் தொகையில் 50% தொகை இந்த 5 நாடுகளிலிருப்பவர்களைச் சார்ந்ததாகும். இதில் டாப் 15 நாடுகள் மொத்த அயல்நாட்டுத் தொகையில் 75% தொகைக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள். டாப் 30 நாடுகளின் பங்களிப்பு 90% ஆகும்.
டாப் 10 நாடுகளில் சிங்கப்பூர், பஹாமாஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், கேமேன் தீவுகள் அடங்கும்.
5 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் நாடுகளில் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் பணத்தில் வெளிநாட்டினர் பங்களிப்பில் இந்தியாதான் மிக மிகக்குறைந்த தொகையை வைத்துள்ளது. சுவிஸ் வங்கி அயல்நாட்டு கணக்குப் பட்டியலில் ரஷ்யா 20வது இடத்தில் உள்ளது. சீனா 22வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிகா 56வது இடத்தில் உள்ளது. பிரேசில் 65வது இடத்திலிருந்து 62வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவை விட முன்னால் உள்ள நாடுகளில் கென்யா (74), மரீஷியஸ் (68), நியூஸிலாந்து (67), வெனிசூலா (61), உக்ரைன் (58), பிலிப்பைன்ஸ் (51), மலேசியா (49), செய்செல்லஸ் (45), இந்தோனேசியா (44), தென் கொரியா (41), தாய்லாந்து (37), கனடா (36), இஸ்ரேல் (28) துருக்கி (26), தய்வான் (24), சவுதி அரேபியா (19), ஆஸ்திரேலியா (18), இத்தாலி (16), ஐக்கிய அரபு அமீரகம் (14), நெதர்லாந்து (13), ஜப்பான் (12), குயர்ன்சே (11) ஆகியவை உள்ளன.
இந்தியாவை விடவும் கீழே உள்ள நாடுகளில் பாகிஸ்தான் (99), வங்கதேசம் (85), நேபாளம் (118), இலங்கை (148), மியான்மர் (186), பூடான் (196) ஆகிய நாடுகள் உள்ளன.
சதவீதக் கணக்குகளின் படி 2019-ம் ஆண்டு சுவிஸ் வங்கியின் அயல்நாட்டு பணத்தில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பணம் சுமார் 3600% அதிகரித்துள்ளது. இராக், வடகொரியா ஆகிய டாப் 10 பங்களிப்பு நாடுகள் 2019-ல் முறையே 500%, 110% அதிகரித்துள்ளது.
அயல்நாட்டு வாடிக்கையாளர்கள் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள மொத்தப் பணத்தின் அளவு 2019-ல் சற்றே அதிகரித்து 1,44 ட்ரில்லியன் சுவிஸ் பிராங்குகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.