பிஹாரில் இடியுடன் கூடிய கனமழை : 83 பேர் பலி,  பலர் காயம் - ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு- பிரதமர் இரங்கல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

பிஹாரில் கடந்த 2 நாட்களாக பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக 83 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர், பெரிய அளவில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வியாழனன்று தெரிவித்துள்ளது.

23 மாவட்டங்களில் பயங்கர இடி, மின்னல் தாக்கியதில் பலி அதிகமாகியுள்ளது, கோபால்கஞ்சில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

நவாதா மற்றும் மதுபானியில் தலா 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூரில் தலா 6 பேரும், கிழக்கு சம்பரான், தார்பங்கா, பங்க்காவில் தலா 5 பேரும், ககாரியா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், மேற்கு சம்பரான், கிஷன்கஞ்ச், ஜெஹனாபாத், ஜாமுய், பூர்னியா, சபவுல், புக்சார், கைமுர் ஆகிய இடங்களில் தலா 2 பேரும் சமஸ்திபுர், ஷியோஹர், சரண், சித்மார்ஹி, மாதேபுராவில் தலா 1 நபரும் பலியாகியுள்ளனர்.

மாவட்டங்களிலிருந்து வந்த தகவல்களின் படி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடி, மின்னலினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

இது குறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் நிதிஷ் குமார் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இதற்கிடையே இதே போன்ற வானிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் 38 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனத்த மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

நிதிஷ் குமார் மாநிலம் உஷார் நிலையில் இருக்கப் பணித்துள்ளார், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளர்.

இந்தத் துயரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டரில், “உ.பி. மற்றும் பிஹாரில் இடியுடன் கூடிய கனமழைக்கு பலர் பலியான செய்தி என்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசுகள் நிவாரணப்பணிகளை உடனுக்குடன் செய்து வருகின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in