Published : 25 Jun 2020 09:07 PM
Last Updated : 25 Jun 2020 09:07 PM

கரோனா வைரஸ் | மொத்த பரிசோதனைகள் 75 லட்சத்துக்கும் மேல்; குணமடையும் விகிதம் 57.43 விழுக்காடாக அதிகரிப்பு

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தலைமையிலான மத்தியக் குழு, 2020 ஜூன் 26 முதல் 29 வரை குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல உள்ளது.

இந்தக் குழு, அம்மாநில அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, கொவிட்-19 தொற்றை நிர்வகிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தி அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.

நாடு முழுவதும் சோதனை வசதிகள் கணிசமான அளவில் உயர்ந்துள்ளன. இந்தியாவில் இப்போது, கொவிட்டை கண்டறியும் 1007 பரிசோதனைச் சாலைகள் உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 734, தனியார் பரிசோதனைச் சாலைகள் 273.

நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 559 (அரசு : 359 + தனியார் : 200), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 364 (அரசு : 343 + தனியார் : 21), CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 84 (அரசு : 32 + தனியார் : 52) ஆகும்.

2020 ஜனவரியில் குறைவாக இருந்த கரோனா பரிசோதனை எண்ணிக்கை தற்போது கணிசமாக கூடியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,07,871 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 75,60,782 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், 13,012 கரோனா நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
மொத்தம் 2,71,696 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 57.43 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,86,514 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சத்துக்கு 33.39 நபராக உள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 120.21 ஆகும். இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகிலேயே இந்தியாவில்தான் இறப்பு விகிதம் மிகக் குறைவு. கொவிட்-19 ஆல் இறப்பவர்களின் உலக சராசரி, ஒரு லட்சத்துக்கு 6.24 நபர் ஆகும். இந்தியாவில் இது ஒரு லட்சத்துக்கு 1.06 நபர் மட்டுமே.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x