Last Updated : 25 Jun, 2020 04:36 PM

 

Published : 25 Jun 2020 04:36 PM
Last Updated : 25 Jun 2020 04:36 PM

போலி மருந்துகளை விற்க அனுமதிக்கமாட்டோம்: பாபா ராம்தேவுக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் போலி மருந்துகளை விற்க அனுமதிக்கமாட்டோம் என்று யோகா குரு பாபா ராம்தேவுக்கு உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கின்றன. மருந்து கண்டுபிடித்து மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஏறக்குறைய ஓராண்டு ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக நேற்று அறிவித்தார். கரோனில் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அந்த மாத்திரை, ஸ்வாசரி எனும் ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கரோனா நோய் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது.

இந்த மருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அளித்துப் பரிசோதித்ததில் அவர்கள் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்ததாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

ஆனால், இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானது தானா என ஆய்வு செய்தபின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும்.

ஆனால், எந்தத் தகவலையும் அனுப்பாமல் விளம்பரம் செய்யக்கூடாது, அறிவிக்கக் கூடாது. உடனடியாக மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலும் ஏமாற்றும் வகையிலும் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை செய்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கரோனில் மருந்து கரோனா வைரஸைக் குணப்படுத்துமா என்பதை ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் கண்டுபிடிக்கும்.

யோகி பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை விடுத்துச் சொல்கிறேன். மகாராஷ்டிராவில் கரோனாவைக் குணப்படுத்தும் போலியான மருந்துகளை விற்க அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் : கோப்புப் படம்

பின்னர் அமைச்சர் அனில் தேஷ்முக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறும் பதஞ்சலி நிறுவனம் செய்த விளம்பரத்தால், அந்த நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் இந்திய மருத்துவ அறிவியல் கவுன்சிலிடமோ அல்லது மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடமோ, சுகாதாரத்துறை அமைச்சகத்திடமோ பதஞ்சலி நிறுவனம் எந்தவிதமான அனுமதியும்பெறவில்லை.

மருத்துவரீதியாக எந்தவிதமான பரிசோதனை முயற்சிகளும் நிறைவடையாதபோது பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகளை விற்க அனுமதிக்க முடியாது என்று ஆயுஷ் அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

ஆதலால், மகாராஷ்டிராவில் இந்த மருந்துகளை விற்கவோ அல்லது விளம்பரம் செய்து கரோனாவைக் குணப்படுத்துவோம் எனக் கூறினாலோ பதஞ்சலி நிறுவனம் மீதும், உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x