மகாராஷ்டிராவில் 80 சதவீதப் பணி உள்ளூர்வாசிகளுக்கே: மண்ணின் மைந்தர் விவகாரத்தை மீண்டும் கிளப்பும் ராஜ் தாக்கரே 

மகாராஷ்டிராவில் 80 சதவீதப் பணி உள்ளூர்வாசிகளுக்கே: மண்ணின் மைந்தர் விவகாரத்தை மீண்டும் கிளப்பும் ராஜ் தாக்கரே 
Updated on
2 min read

மகாராஷ்டிராவின் 80 சதவீதப் பணி உள்ளூர்வாசிகளுக்கே என மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா(எம்என்எஸ்) கூறியுள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவின் மண்ணின் மைந்தர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை நேற்று முன் தினம் எம்என்எஸ் கட்சியின் மூத்த தலைவர் நந்த்கோன்கர் மற்றும் ராஜ் தாக்கரேவின் மகனான அமித் தாக்கரேவுடனான ஒரு குழு சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதில், திரும்பி வருபவர்கள் ‘மகாராஷ்டிராவின் வெளிமாநிலத் தொழிலாளர் சட்டம் 1979’ -இன்படி பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், அதில் உள்ளூர்வாசிகளுக்கு 80 சதவீதப் பணிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சார்பில் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஆளுநர் கோஷியாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக 1979 இல் விதிக்கப்பட்ட சட்டத்தின்படி எவரும் பதிவு செய்யாமல் பணியாற்றியதால்தான் கரோனா காலத்தில் அவர்களுக்குப் பலவகையான சிக்கல்கள் நேர்ந்தன.

எனவே, மீண்டும் திரும்புபவர்களை மகாராஷ்டிராவின் சட்டத்தின்படி பதிவு செய்து முறைப்படுத்த இதுவே உகந்த தருணமாகும். இதில் 80 சதவீதப் பணி மராத்தியர்களுக்கு ஒதுக்கிவிட்டு மீதியில் வெளிமாநிலத்தினருக்கு அளிக்கப்பட வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக தமிழர்களை எதிர்த்து முதன் முறையாக மண்ணின் மைந்தர் பிரச்சினையைத் தொடங்கியவர் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே. இவரது சகோதரர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவில் சுமார் 12 வருடங்களாக அவருக்கு நெருக்கமாக இருந்தார்.

பால் தாக்கரே தன்னைத் தவிர்த்து தனது சொந்த மகனான உத்தவ் தாக்கரேவுக்கு முக்கியப் பதவி கொடுத்ததால் அவருடன் ராஜுக்கு மனக் கசப்பு ஏற்பட்டது. இதனால், சிவசேனாவை விட்டு வெளியேறிய ராஜ் எம்என்எஸ் எனும் பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.

அப்போது பால் தாக்கரேவை போல் தானும் ‘மண்ணின் மைந்தர்’ விவகாரத்தைக் கையில் எடுத்த ராஜ், மகாராஷ்டிராவில் உ.பி., பிஹார் உள்ளிட்ட வட மாநிலத்தினரை வெளியேற வேண்டும் எனப் போராட்டம் நடத்தினார். பல உயிர்கள் பலியான பின் அடங்கி இருந்த இப்பிரச்சினையை ராஜ் தாக்கரே மீண்டும் கையில் எடுக்க முயல்வதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in