Last Updated : 25 Jun, 2020 02:32 PM

 

Published : 25 Jun 2020 02:32 PM
Last Updated : 25 Jun 2020 02:32 PM

சீனாவுடன் எல்லை விவகாரத்தில் மோடி அரசு வெற்றி பெறுமா என மக்கள் கவனிக்கிறார்கள்: ப.சிதம்பரம் விமர்சனம்

சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் ஏற்கெனவே இருந்த நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்ளும் விஷயத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மோடி அரசு வெற்றி பெறுமா என்று மக்கள் கவனிக்கிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் இந்திய நிலைகளை ஆக்கிரமித்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதை மறுக்கும் மத்திய அரசு, இந்திய எல்லையில் எந்தப் பகுதியையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் இந்தியா -சீனா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

“கல்வான் பள்ளத்தாக்கு முழுமையும் தங்களுடையது, தங்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும், சீன ராணுவமும் மீண்டும் ஆனித்தரமாகக் கோரிக்கை வைத்து, இந்திய ராணுவத்தை வெளியேறக் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு மாறாக, 2020, ஏப்ரல்-ஜூன் மாதங்களில் சீன ராணுவத்தினரால் எல்லையில் பதற்றத்துக்குரிய பொது எல்லைகள் மாற்றப்பட்டு மீறப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதில் மோடி அரசு வெற்றி பெறுமா என மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிசெய்து, பழைய நிலை கொண்டுவருமா?''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. சீனாவை எல்லையில் இருந்து பின்வாங்கச் செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆயுதங்களைச் சும்மா வைத்திருக்கக் கூடாது.

இந்தியா தற்போது இக்கட்டான கட்டத்தில் இருப்பதால், சீன ராணுவத்தை எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்குப் பணிந்துவிடக்கூடாது. சீனா உற்சாகமாகவும், ஆர்வமாகவும் நமது எல்லையை நிதானமாக ஆக்கிரமிக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும், எல்லைப்புற ஒருமைப்பாட்டுக்கும் அச்சறுத்தல்.

நாம் சீன ராணுவத்துக்குப் பதிலடி கொடுக்க வேண்டும், நம்முடைய ராணுவத்திடம் இருக்கும் ஆயுதங்கள் முட்டையிடுவதற்கு அல்ல. பதிலடி கொடுத்து, சீனாவை திருப்பி அனுப்ப வேண்டும். இந்த மோதலின் போக்கைத் தீர்மானப்பதில் கடவுள் இந்தியர்கள் பக்கம் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x