

மேற்கு வங்க காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய கட்சிகள் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை வகுத்து அதனடிப்படையில் பாஜக-வையும் ஆளும் திரிணமூல் கட்சியையும் எதிர்க்க திட்டம் வகுத்துள்ளனர். அடுத்த ஆண்டு மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் இருக்குமிடம் தெரியாமல் தோற்கடிக்கப்பட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்காக இப்போதே தயாராகின்றனர் காங்கிரஸ், இடதுசாரிக் கூட்டணியினர்.
புதன்கிழமை மாலை இரு கட்சிகளும் முதல் கூட்டத்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு 4 மணி நேரம் நடந்தது. முதலில் மத்திய அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலையை எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர், ஜூன்29ம் தேதி இந்தப் பேரணி நடைபெறும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறும்போது, “இரு கட்சிகளும் சேர்ந்து குறைந்தப் பட்ச செயல்திட்டம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.. இதனடிப்படையில் அரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன. இது ஒருதலைபட்சமாக இருக்காது” என்றார்.
மேற்கு வங்கத்தில் பாஜக நல்ல அடித்தளத்தைப் பெற்று வருவதையடுத்து இடதுசாரி, காங்கிரச் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், மதச்சார்பு சக்திகளை நிறுத்த ஒரு எதிர் சகதி தேவை என்றும் சோமன் மித்ரா தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு கடும் சோதனை அளிப்பதில் பாஜக பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து, அங்கு இடதுசாரிகளையும் காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
2019 லோக்சபா தேர்தல்களில் பாஜக 42 இடங்களில் 18 இடங்களை வென்றது. திரிணமூலை விட 4 இடங்கள்தான் குறைவு. 2014-ல் 34 இடங்களில் வென்ற பாஜக 2019-ல் 22 இடங்களில்தான் வென்றது. இட்து சாரி முன்னணி ஒரு இடம் கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சியோ 4 இடங்கள் என்பதிலிருந்து 2 இடங்களாகச் சுருங்கியது.
சிபிஎம்-காங்கிரஸ் கட்சிகள் 2016-ல் கூட்டணி அமைத்த போது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 2019-ல் காங்கிரஸ்-இடது சாரிக் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் கூட்டணி அமைக்காமல் போனது
இந்நிலையில் பாஜக, திரிணமூல் இரண்டையும் வீழ்த்த உத்தி வகுத்து வருகிறது காங்கிரஸ்-இடது முன்னணி கூட்டணி.