

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் விண்வெளி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் சில கட்டுப்பாடுகளுடன் தனியார் நிறுவனங்கள் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
விண்வெளித் துறையில் இந்தியாவின் முழுத் திறனையும் வெளிப்படுத்த இந்த நடவடிக்கை நிச்சயம் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) அமைப்பானது, தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரும். அதேபோல தனியார் நிறுவனங்களும் இத்துறையில் பங்கேற்பதற்கு உரியபோட்டிகரமான வர்த்தக சூழலுக்கான கட்டமைப்பை உருவாக்கும். இதன் மூலம் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாடு, வழிகாட்டல் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முழுமையாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தும். புதியதொழில்நுட்பங்களை உருவாக்குவது, புதிய விண்வெளி பயண திட்டங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வது, மனிதர்களை விண்வெளிக்கு பயணம் செய்வதற்கானவிண்கலங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும். இத்துறையில் ஈடுபட விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கும் வேற்றுகிரகங்களுக்கு பயணம் செய்வது தொடர்பான வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும். இதன் மூலம் விண்வெளித் துறையில் புதிய வாய்ப்புகள் தனியார் துறையினருக்கு உருவாக்கித் தரப்பட்டுள்ளது என்றும்பிரதமர் அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்(என்எஸ்ஐஎல்) தனது செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றிக் கொள்ளும். இதுவரை விண்வெளி சார்ந்தபொருள் தேவைகளை இந்நிறுவனம் சப்ளை செய்து வந்தது. இனிமேல் தனியார் நிறுவனங்களும் ஈடுபடும் போது அவற்றுக்குத் தேவையான பொருட்களை தேவையின் அடிப்படையில் உருவாக்கித் தரும் நிறுவனமாக மாறும். இதன்மூலம் விண்வெளித் துறையில் உருவாக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை அதிகபட்ச அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வழியேற்பட்டுள்ளது என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
விண்வெளித் துறையில் மிகச்சிறப்பான கட்டமைப்பு வசதிகளைஇந்தியா உருவாக்கி உள்ளது. இந்த முடிவின் மூலம் இந்தியநிறுவனங்கள் இந்த வசதியை பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இது மத்திய அரசு நிறுவனமாக அதிக மக்கள் அணுகும் வகையிலானதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியில் முன்னேறிய வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. தனியார் துறையினரும் ஈடுபட வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இத்துறை மிகுந்த வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்படும் விரிவாக்க நடவடிக்கைகள் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். புதிய சீர்திருத்த நடவடிக்கை மூலம் விண்வெளித் துறை சார்ந்த சொத்துகள் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.