

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சல் கங்வால். 24 வயதாகும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய விமானப் படையின் போர் விமான பைலட் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சாதனையைப் படைக்க இவர் பல தடைகளைத் தாண்டி வந்துள்ளார்.
அஞ்சல் கங்வாலின் தந்தை சுரேஷ் கங்வால், ம.பி.யின் நீமுச் மாவட்ட பேருந்து நிலையத்தில் தேநீர் விற்பவர். அதனால் குடும்ப பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. எனினும், படிக்க வேண்டும் என்ற கனவு அஞ்சாலை தூங்கவிடவில்லை. பல நேரங்களில் கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் வேதனை அடைந்துள்ளார்.
இதுகுறித்து இவரது தந்தை சுரேஷ் கங்வால் கூறும்போது, ‘‘என் மகள் விமானப் படை பைலட்டானது எங்கள் குடும்பத்துக்கு மிகப் பெருமையான தருணம். ஆனால், கரோனா ஊரடங்கால் விமானப் படை அகாடமியில் நடந்த பொறுப்பேற்கும் விழாவில் எங்களால் பங்கேற்க முடியவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு கேதார்நாத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது, விமானப் படையினர் துணிச்சலுடன் செயல்பட்டு பலரைக் காப்பாற்றினர். அந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட எனது மகள், விமானப் படையில் சேர வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொண்டார். அது அவ்வளவு சாதாரணமானதல்ல. பல கஷ்டங்களை அனுபவித்தார். நிறைய புத்தகங்களைப் படித்து விமானப் படையில் சேர்வதற்கு முயற்சி எடுத்தார். ஆறாவது முயற்சியில் அவருடைய கனவு நனவாகி உள்ளது’’ என்றார்.
அஞ்சால் சாதனையை ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்கான் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.