Published : 24 Jun 2020 09:04 PM
Last Updated : 24 Jun 2020 09:04 PM

கேரளாவில் தீவிரமடையும் கரோனா; போலீஸாருக்குக் காலை 7 மணி முதலே பணி: பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் கரோனா தீவிரமடைந்து வருவதாகவும் போலீஸாருக்குக் காலை 7 மணி முதலே பணி இருக்கும் எனவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

’’கேரளாவில் இன்று 152 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 81 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 46 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 8 பேருக்கு இந்நோய் பரவியுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் டெல்லியில் இருந்தும், 12 பேர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்தும், தலா 5 பேர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்தும், 4 பேர் கர்நாடக மாநிலத்தில் இருந்தும், 3 பேர் ஆந்திராவில் இருந்தும், தலா ஒருவர் குஜராத் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 18 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 17 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 16 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், தலா 15 பேர் திருச்சூர் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், 10 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 7 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 6 பேர் காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 3 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 2 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் குணமடைந்தவர்களில் 35 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 13 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 10 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 7 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா 4 பேர் திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 2 பேர் இடுக்கி மாவட்டத்தையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று ஒரே நாளில் 4,941 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 3,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,691 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,54,759 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,282 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 288 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,48, 827 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,005 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 40,537 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 39,113 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. தற்போது கேரளாவில் 111 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு யாரும் வரவேண்டாம் எனக் கூறவில்லை. விமானப் பயணத்தின்போது நோய் பாதிக்க வாய்ப்பு உள்ளதால் கரோனா பரிசோதனை நடத்திவிட்டு வரவேண்டும் என்றுதான் கூறப்பட்டது.

ஆனால், சில நாடுகளில் பரிசோதனை வசதிகள் இல்லாததால் அங்கிருந்து வருபவர்கள் கவச உடை அணிந்து வரவேண்டும். கேரளா வந்த பின்னர் அனைத்து விமான நிலையங்களிலும் முழு பரிசோதனை நடத்தப்படும். இந்தப் பரிசோதனை முடிந்த பிறகு சுகாதாரத்துறையினர் சான்றிதழ் அளித்தால் மட்டுமே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியும்.

இன்று மட்டும் கேரளாவுக்கு வர 72 விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் 14,058 பேர் கேரளா வர உள்ளனர். ஒரு விமானம் தவிர மற்ற அனைத்து விமானங்களும் வளைகுடா நாடுகளில் இருந்து வருகின்றன.

இதுவரை கேரளாவுக்கு வெளிநாடுகளிலிருந்து 543 விமானங்களும், 3 கப்பல்களும் வந்துள்ளன. தற்போது கேரளாவுக்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் திரும்பி வரத் தொடங்கி உள்ளனர். முறையான பாஸ் பெற்று வருபவர்கள் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும். பாஸ் இல்லாமல் வருபவர்கள் அவர்களது ஒப்பந்தக்காரர்களின் பொறுப்பில் தனிமையில் இருக்க வேண்டும். முறையான பாஸ் இல்லாமல் வருபவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது. அவர்கள் தனிமை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கேரளாவில் தற்போது நோய்த் தீவிரம் அதிகரித்து வருவதால் போலீஸ் கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டி உள்ளது. எனவே காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிபவர்கள் உள்பட அனைத்து போலீஸாரும் நாளை காலை 7 மணி முதல் பணிக்கு ஆஜராக வேண்டும். மாநில தனிப்பிரிவு போலீஸ் தவிர அனைத்து சிறப்புப் பிரிவில் பணிபுரியும் 90 சதவீதம் ஊழியர்களும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியின் கட்டுப்பாட்டில் பணியில் இருக்க வேண்டும். அனைவரும் நாளை அந்தந்த மாவட்ட எஸ்பிக்களின் முன்னிலையில் பணியில் தயாராக இருக்க வேண்டும்’’.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x