

நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்தார். அவர் கூறியதாவது:
நாட்டில் உள்ள 1,482 நகர்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முகமாநில கூட்டறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கூட்டுறவு வங்கியில் உள்ள 8.6 கோடி முதலீட்டாளர்களி்ன் பணத்தை பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பஞ்சாப் கூட்டுறவு வங்கி, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள் அதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரூ.4.84 லட்சம் கோடி பணம் பாதுகாப்பாக இருக்கும். கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரும் இந்த அவசரச்சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றவுடன் நடைமுறைக்கு வந்துவிடும்.
பிரதமர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் சிஷூ கடன் திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு 2 சதவீதம் வட்டியில் தள்ளுபடி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. சிஷூ திட்டத்தின் கீழ் எந்தவிதமான பிணையும் இன்றி ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற முடியும். அவ்வாறு பெற்றவர்களுக்கு 2 சதவீதம் வட்டி கழிவு உண்டு
மேலும், நாட்டில் உள்ள பால்பண்ணை, கோழிப்பண்ணை, இறைச்சிப் பண்ணைகள் புதிதாக அமைப்பதற்கான கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தவும், இறைச்சி ஏற்றுமதியை அதிகப்படுத்தவும், 35 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.
பால் பதப்படுத்துதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் கோழிப்பண்ணை ஆகிய மூன்று பிரிவுகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடியில் கடன் வழங்கப்படும். முதல் முறையாக பதப்படுத்தும் கூடத்தை அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு வட்டி தள்ளுபடியை அரசு அறிவித்தள்ளது.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்