Last Updated : 24 Jun, 2020 04:28 PM

 

Published : 24 Jun 2020 04:28 PM
Last Updated : 24 Jun 2020 04:28 PM

இந்தியாவில் இதுவரை 73.50 லட்சம் மாதிரிகள் பரிசோதனை; நாள்தோறும் 2 லட்சமாக அதிகரிப்பு: ஐசிஎம்ஆர் தகவல்

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து ஜூன் 23-ம் தேதிவரை மொத்தம் 73 லட்சத்து 50 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும்பரிசோதனையின் அளவு 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

''நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து படிப்படியாக பரிசோதனையின் அளவை அதிகரித்து வருகிறோம். செவ்வாய்க்கிழமை மட்டும் 2.15 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாள்தோறும் பரிசோதிக்கப்படும் மாதிரிகள் 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாள்தோறும் 3 லட்சம்வரை மாதிரிகள் பரிசோதிக்க முடியும்.

கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிக்க உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தின் எண்ணிக்கையும் ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 730 பரிசோதனைக் கூடங்கள் அரசின் வசம் உள்ளன. 270 தனியார் பரிசோதனைக் கூடங்களாகும். ஆர்டி பிசிஆர் ஆய்வுக்கூடம் 557, ட்ரூநெட் லேப் 363, சிபிஎன்ஏஏடி லேப் 80 உள்ளன.

ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமை வரை (நேற்று) 73 லட்சத்து 52 ஆயிரத்து 911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 195 மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய தற்போது பிசிஆர் டெஸ்ட் மூலமே கண்டறியப்பட்டு வருகிறது. இதன் முடிவு கிடைக்க 4 முதல் 5 மணிநேரம் ஆகும். ஆய்வகத்தில் உள்ள இயந்திரத்தில் ஒருமுறைக்கு 90 மாதிரிகளை வைத்துப் பரிசோதிக்க முடியும், அதன் மூலம் துல்லியமான முடிவுகளை அறிய முடியும்.

ட்ரூநாட், சிபிஎன்ஏஏடி முறையின் மூலமும் கரோனா பரிசோதனை செய்ய முடியும். இந்த முறை நாட்டின் பல்வேறு மாவட்ட மருத்துவமனை, முதன்மை சுகாதார மையத்தில்கூட உள்ளன. இந்த முறை மூலம் காசநோய் உள்ளிட்ட பிற தொற்றைக் கண்டறிய முடியும்.

இந்த முறையின் மூலம்கூட கரோனா வைரஸ் பரிசோதனை செய்ய முடியும். அவ்வாறு செய்தால் மிக விரைவாக 30 முதல் 60 நிமிடங்களில் முடிவை அறியலாம். ஆனால், இதற்கான இயந்திரத்தில் ஒருமுறைக்கு 4 மாதிரிகளுக்கு மேல் வைத்துப் பரிசோதிக்க முடியாது. நாள்தோறும் அதிகபட்சமாக ஒரு ஆய்வகத்தில் 48 மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்க முடியும்.

இதுவரை ரேபிட்-ஆன்டிஜென் பரிசோதனையையும் ஐசிஎம்ஆர் அங்கீகரித்துள்ளது. இந்த முறையின் மூலம் 30 நிமிடங்களில் முடிவை அறியலாம். ஆனால், ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை, ஆர்டி-பிசிஆர் பரிசோதனையுடன் சேர்த்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், மத்திய, மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஐசிஎம்ஆர் சான்று அளித்த ஆய்வகங்களில் செய்யலாம்.

ஆன்டிஜென் பரிசோதனை என்பது நோய் எதிர்ப்புச் சக்தியை அறியவே அன்றி கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய அல்ல. அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் அச்சத்தைக் குறைக்க இந்தப் பரிசோதனை செய்யப்படலாம்''.

இவ்வாறு ஐசிஎம்ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x