

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் சீனாவின் தாக்குதலில் வீர மரணம் எய்தியதை அடுத்து நாடு முழுதும் சீனப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் சீனத் தயாரிப்பான மின்சார மீட்டர்களைப் பயன்படுத்தத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உ.பி. மின்சாரத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:
சீன மீட்டர்களை நிர்மாணிப்பது மாநிலம் முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஓராண்டு காலம் சீன மீட்டர்கள் மற்றும் மின்சாதனக் கொள்முதல் விவரங்களையும் சீன பொருட்கள் கொள்முதலுக்கான ஒப்பந்த விவரங்களும் அரசால் கேட்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய மின்சார பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷைலேந்திர துபே உ.பி. அரசின் இந்த முடிவுகளை வரவேற்றுள்ளார். மேலும் அவர் கூறும்போது சீன பொருட்கள் மலிவானவை ஆனால் தரத்தை எதிர்ப்பார்க்க முடியாது என்றார்.
பிரதமரின் தற்சார்புக் கொள்கையை வரவேற்ற துபே மின் சாதனப்பொருட்களை பி.எச்.இ.எல். நிறுவனத்திடமிருந்து நாம் வாங்க வேண்டும் என்றார்.
கடந்த வாரம் உ.பி சிறப்புப் பணிக்குழு தங்கள் பணியாளர்களை சீன செயலிகளான டிக் டாக், ஹலோ, யு.சி.நியூஸ், யு.சி. பிரவுசர், செண்டர், கிளப் பாக்டரி, வொண்டர் கேமரா, செல்ஃபி சிட்டி மற்றும் பிறவற்றை நீக்குமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.