பெங்களூருவில் 59 போலீஸாருக்கு கரோனா: 6 காவல் நிலையங்கள் மூடல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பெங்களூருவில் 59 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், 6 காவல் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த சில தினங்களாக பெங்களூருவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கும் இந்நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் பெங்களூருவில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே போல காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பு, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, உடல் வெப்பநிலையை கண்டறிவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை கிடைத்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பெங்களூருவில் 59 போலீஸாருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 6 காவல் நிலையங்களை முழுமையாக மூடியுள்ளோம். அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆன் லைன் மூலம் புகார்களை அளிக்கும்படி அறிவித்துள்ளோம்.

இதனால் மற்ற காவல் நிலையங்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸாருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. உடல்நிலை பாதிப்பு, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், 55 வயதை கடந்த போலீஸாருக்கு பணிக்குவருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸார் வீட்டில் இருந்தவாறு பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் பெங்களூருவை விட்டு வெளியூருக்கு செல்ல கூடாது. கைது செய்யும் நபர்களை காவல் நிலையம் அழைத்து செல்வதற்கு முன்பு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும். போலீஸார் பயன்படுத்தும் வாகனங்களை தினமும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in