

மத்தியப்பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 75 சதவீதம் பேர் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவில் பாதி்க்கப்பட்டு உயிர்தப்பியவர்கள் என்று ஆய்வி்ல் தெரியவந்துள்ளது.
ஜூன் 11-ம் தேதிவரை நடத்தப்பட்ட ஆய்வில் போபால் நகரில் 60 பேர் கரோனா வைரஸால் உயிரழந்துள்ளார்கள். அதில் 48 பேர் போபால் விஷவாயுக் கசிவில் சிக்கி சிகிச்சையால் உயிர்தப்பியவர்கள் என்று தொண்டுநிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வு அறிக்கையையும் முதல்வர் சிவராஜ் சவுகானுக்கும் அந்த தொண்டுநிறுவனம் அனுப்பியுள்ளது
1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவில், மத்தியபிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த விபத்தால் கசிந்த விஷவாயு அப்பகுதியில் பரவியதால் 3500 க்கும் அதிகமானோர் பலியானார்கள். சுமார் ஐந்து லட்சம் மக்களின் கை, கால்களை காவு வாங்கி அவர்களை முடக்கி போட்டது.
உலகளவில் நடந்த இந்த மோசமான பேரழிவில் பாதிக்கபட்டவர்களுக்கு இன்னமும் சரியான நீதியும் கிடைக்கவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை. விபத்து நடந்து 31 ஆண்டுகள் கடந்தும், ஏறக்குறைய மூன்றாவது தலைமுறையும் கடுமையாக பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் கோரமாகவும், பல்வேறு பிறவிகுறைபாடுகளுடனும் பிறப்பதை சமீபத்தில் வெளிவந்த மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது கடும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
கடும் நச்சுத்தன்மை மிகுந்த Methyl isocyanate வாயு, சுமார் 40 டன் அளவுக்கு கசிந்ததுதான் இந்த மோசமான விபத்துக்கு காரணம். அன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களில் சிலருக்கு சமீபத்தில் பிறந்த பேரக்குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டு தப்பித்தவர்கள் தற்போது கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இரையாகிவிட்டார்கள். போபால் விஷவாயு கசிவில் தப்பித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறந்த குழந்தைகள் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருந்ததால், கரோனாவுக்கு எளிதில் இலக்காகியுள்ளனர்
இதுகுறித்து போபால் குரூப் ஃபார் இன்ஃபர்மேஷன் அன்ட் ஆக்்ஸன்(பிஜிஐஏ) எனும் அமைப்பின் நிறுவனம் ரச்சனா திங்ரா பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “ கரோனா வைரஸால் போபால் நகரில் கடந்த ஜூன் 11-ம் தேதிவரை 60 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதில் 48 பேர் போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் உயிர்தப்பியவர்கள்.
இந்த 48 பேரில் 3 பேர், போபால் விஷவாயுக் கசிவில் உயிர்தப்பிய பெற்றோருக்கு பிறந்தவர்கள். அந்த 3 பேருக்கும் 35 வயதுக்குள்ளாகவே இருக்கும்.
போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு தற்போது கரோனாவில் உயிரிழந்த இந்த 48 பேருக்கும் வாயுக்கசிவுக்குப்பின் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திதிறன் குறைந்துவிட்டது, அவர்களுக்குபிறந்த குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகள் வரை இந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த மோசமான விஷயம் குறித்து முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு எங்கள் அமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகள் சார்பில் கடிதம் எழுதி கவனம் செலுத்தக் கோரியுள்ளோம்.
மேலும், போபால் விஷவாயுக் கசிவில் தப்பித்து கரோனாவுக்கு உயிரிழந்த 48 பேரில் 81 சதவீதம்பேருக்கு நீண்டகால நோய்கள் இருந்து வந்துள்ளன. அதாவது நீரிழிவு, இருதய நோய், ரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்கு மருந்துகள் உட்கொண்டு வருகின்றனர்.
போபால் விஷவாயுக் கசிவுக்குப்பின் அவர்களின் உடலில் இருந்த நோய் எதிர்ப்புச்சக்தி மோசமாக சீர்குலைந்துவிட்டது. விரைவாக மாநில அரசு நடவடிக்கை எடுத்து விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்.
ஆனால், எங்கள் அறிக்கையை மாநில அரசு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். விஷவாயுக் கசிவில் பதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள், எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் குறித்த புள்ளிவிவரங்கள் கூட மாநில அரசிடம் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது
இவ்வாறு திங்ரா தெரிவித்தார்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்றுவரை கரோனாவால் 12 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 521 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது