

நாடு முழுவதும் 30 லட்சத்துக்கு 81 ஆயிரத்து 873 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.க்கள்) செயல்படுகின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதன்படி கணக்கிட்டால் ஒரு போலீஸ்காரருக்கு 2 என்ஜிஓக்கள் என்ற விகிதத்தில் எண்ணிக்கை உள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே தலைமையில் செயல்படும் தொண்டு நிறுவனம் நன்கொடைகளை தவறாகப் பயன்படுத்துவதாக வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டில் எத்தனை தொண்டு நிறுவனங்கள் உள்ளன என்ற விவரத்தை சேகரித்து அவற்றில் எத்தனை நிறுவனங்கள் வருடாந்திர வரவு செலவு கணக்கை சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய் கின்றன என்ற தகவலை தாக்கல் செய்யும்படி சிபிஐ-க்கு உத்தர விட்டிருந்தது. அதன்படி தொண்டுநிறுவ னங்கள் விவரத்தை உச்ச நீதி மன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ம்தேதி சேகரித்த கணக்கின்படி நாடு முழுவதும் 30,81,873 தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதேநேரத்தில் 10 சதவீத என்.ஜி.ஓ.க்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வரவு செலவு கணக்கை தாக்கல்செய்கின்றன. இந்த கணக்கை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் உரிய அதிகாரியிடம் தாக்கல் செய்வது சட்டப்படி கட்டாயமாகும்.
ஆனால் கிடைத்துள்ள தகவல்களை ஆய்வு செய்தால் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் தம்மிடம் உள்ள நிதியை எப்படி செலவுசெய்கின்றன என்ற விவரம் தெரியவரவில்லை.
மொத்தம் 2.9 லட்சம் தொண்டு நிறுவனங்களே வருடாந்திர வரவு செலவு கணக்கை தாக்கல் செய்கின்றன. 147 தொண்டு நிறுவனங்கள் ஜம்மு-காஷ்மீரிலும் 34 தொண்டு நிறுவனங்கள் மிசோரமிலும் உள்ளன. இந்த மாநிலங்கள் சட்டம் நிர்ணயித்தபடி கணக்கு விவரத்தை தவறாமல் தாக்கல்செய்கின்றன.
தொண்டு நிறுவனங்கள் எண்ணிக்கையை நாட்டில் உள்ள மொத்த போலீஸார் எண்ணிக் கையுடன் ஒப்பிட்டால் ஒரு போலீஸுக்கு இரண்டு தொண்டு நிறுவனங்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்த போலீஸார் எண்ணிக்கை 15.85 லட்சம் ஆகும் என்று சிபிஐ தாக்கல்செய்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா ஹசாரேவின் ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட் தம்மிடம் உள்ள நிதியை தவறாக பயன்படுத்துவதாக தனது மனுவில் ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார். இது பற்றி மாநில அரசு கொடுத்த விவரங்களை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு 2013 செப்டம்பர் 2-ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நன் கொடை உள்ளிட்ட நிதி வசூல் விவரங்களை சேகரிக்கும்படி உத்தரவிட்டது.
ஊரக மேம்பாட்டு அமைச்சகத் தின் கீழ் செயல்படும் ஊரக தொழில்நுட்பம் மற்றும் பொது மக்கள் செயல்பாடு மேம்பாட்டு மன்றம், ஹசாரேவின் தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளது. 1999-2001-ல் 3 கிராமங்களில் சொட்டு நீர்பாசன திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படவேண்டும் என்று திட்டத்தின் நோக்கம். ஆனால் பயணம், அச்சு, எழுதுபொருள்கள், உள்ளிட்டவற்றுக்கே 90 சதவீத நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.