Published : 24 Jun 2020 06:52 AM
Last Updated : 24 Jun 2020 06:52 AM

தந்தையர் தினத்தில் தனது தந்தையை நினைவுகூர்ந்த சத்ய நாதெல்லா

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா தனதுமறைந்த தந்தைக்கு உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்தி உள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான அவரது தந்தை பின்.என்.யுகந்தர், கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் மற்றும் மத்தியஅரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். பிரதமர் அலுவலகத்திலும் திட்டக்குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

அவரை நினைவுகூரும் வகையில் சத்ய நாதெல்லா சமூக வலைதளம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நள்ளிரவில் எழுந்து ஒரு ரஷ்ய எழுத்தாளரின் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நீண்ட நாள் வேலையில் இருந்து அவர் ஓய்வு எடுப்பதைக் கண்டுள்ளேன்.

களப் பணி, கொள்கை வகுத்தல்,சட்டமன்றப் பணிகள் என ஒவ்வொரு துறையிலும் பல ஆண்டுகள் அந்தந்த துறையின் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்தார். அவர் யாருக்காக பணியாற்றினாரோ அவர்களின் வாழ்க்கையில் தனது பணி ஏற்பத்திய விளைவுகளை கண்டு அவர் ஆழ்ந்த திருப்தி அடைந்தார்.

அவர் தனது வேலையை தனது வாழ்க்கையின் ஆர்வங்களுடன் இணைத்த விதமும் அதிலிருந்து அவர் பெற்ற ஆழ்ந்த அர்த்தமும் வேலை மற்றும் வாழ்க்கை குறித்த எனது சொந்தக் கருத்துகளை வடிவமைத்துக் கொள்ள ஒரு கருவியாக உள்ளது. திறந்த மனதுடன் இருப்பதன் அவசியமும் ஒருவர் தனது வாழ்க்கை முழுவதும் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் எனது தந்தையின் வாழ்க்கையில் நான் படித்த பாடங்களில் நீடித்திருக்கிறது.

நான் மிகவும் வித்தியாசமான சூழலிலும் நேரத்திலும் பணியாற்றுகிறேன். எனினும் அவர் தனது வாழ்க்கை மூலம் எனக்கு கற்பித்த பாடங்கள் மூலம் வழி நடத்தப்படுகிறேன்.

இவ்வாறு சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x