Published : 23 Jun 2020 04:04 PM
Last Updated : 23 Jun 2020 04:04 PM

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் பணத்தை பிடித்தம் இல்லாமல் திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி

கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாத சூழலால் அதற்கு செல்வதற்காக இந்தியாவில் விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

கரோனா தொற்று சவால்கள் காரணமாக, சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தி்ல் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை (1441 H/2020 AD) மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று தெரிவித்தார். இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசினார்.

சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு (1441 H/2020 AD), இந்தியாவில் இருந்து
ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என சவுதி அரேபியா அமைச்சர் ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து விரிவாக ஆலோசித்தாகவும், கரோனா தொற்று சாவல்களை இந்த உலகமே சந்தித்து வருவதாகவும், இதனால் சவுதி அரேபியாவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்.

இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்.

இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு (2021) ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர்.

கடந்த 2019ஆம் ஆண்டில், மொத்தம் 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர் என நக்வி தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதபெண்களும் அடங்குவர். ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மத்திய அரசு கடந்த 2018-இல் உறுதி செய்த பின், மொத்தம் 3,040 பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x