Last Updated : 23 Jun, 2020 03:04 PM

 

Published : 23 Jun 2020 03:04 PM
Last Updated : 23 Jun 2020 03:04 PM

பிஎம் கேர்ஸ் நிதியுதவி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,340 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு : மத்திய அரசு தகவல்

பி.எம்.கேர்ஸ் நிதியுதவியின் மூலம் உள்நாட்டில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதில் ஏறக்குறைய 3 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 1,340 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம அமைச்சரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலநிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார்.

இதில் பிரதமர் மோடி தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இந்த பிஎம். கேர்ஸ் நிதியிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர் வாங்க ரூ.2 ஆயிரம் கோடியும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடியும், கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு ஆதரவாக ரூ.100 கோடி என மொத்தம் ரூ.3,100 கோடியில் ஒதுக்கப்பட்டது

கரோனா வைரஸை சமாளிக்கப் போதுமான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குப் பயன்பாட்டுக்காக அனுப்பிவைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் இதுவரை 1,340 வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த 50 ஆயிரம் வென்டிலேட்டர்களில் 3 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில்2,923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு அதில் முதல்கட்டமாக 1,340 வென்டிலேட்டர்கள் மாநிலங்களிடம் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதுவரை அதிகபட்சமாக மகாரஷ்டிரா(275), டெல்லி(275) வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக குஜராத்துக்கு 175, பிஹாருக்கு 100, கர்நாடகவுக்கு 90, ராஜஸ்தானுக்கு 75 வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர, 20 ஆயிரம் வென்டிலேட்டர்கள், ஏஜிவிஏ ஹெல்த்ேகர்(10 ஆயிரம்), ஏஎம்டிஇசட்பேசிக்(5,650), ஏஎம்டிஇசட் ஹை என்ட்(4000), அலைட் மெடிக்கல்(350) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.ஆயிரம் கோடி பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 50 சவீதம், கரோனா நோயாளிகள் அளவில் 40 சதவீதம் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் 10 சதவீதம் சரிவிகிதப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டுள்ளது

அந்த வகையில் மகாராஷ்டிராவுக்கு ரூ.181 கோடி, உத்தரப்பிரதேசம் ரூ.103 கோடி, தமிழகம் ரூ.83 கோடி, குஜராத்துக்கு ரூ.66 கோடி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கு ரூ.55 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.53 கோடி, பிஹாருக்கு ரூ.51 கோடி, மத்தியப்பிரதேசத்துக்கு ரூ.50 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.50 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.34 கோடி வழங்கப்பட்டுள்ளது

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x