

சீனாவுடனான லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தியதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் மோடி பேசியதன் கருத்தை சீன ஊடகங்கள் பாராட்டியிருந்தன, அது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை பிரதமர் மோடியின், “யாரும் நம் எல்லையில் ஊடுருவவில்லை. இப்போது யாரும் அங்கு இல்லை. நம் இடங்கள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை” என்ற கூற்றை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி ராணுவப்படைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார், மேலும் பிரதமர் மோடி மோதலைத் தணித்துத்தான் தெரிவித்துள்ளார்.
தேசியவாதிகளுக்கும் மற்ற கடின நிலைப்பாட்டு வாதிகளுக்கும் கடினமான நிலைப்பாடு எடுத்து பேசியுள்ளார், ஆனால் சீனாவுடன் மேலும் மோதல் வைத்துக் கொள்ள முடியாது என்பதை மோடி புரிந்து வைத்துள்ளார், அதனால்தான் பதற்றங்களைத் தணிக்க அவர் முயற்சி செய்கிறார்” என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துப் பாராட்டியிருந்தது.
இதனையடுத்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி, “சீனா நம் ராணுவ வீரர்களை கொன்றுள்ளது. நம் நிலத்தை ஆக்ரமித்துள்ளது. இந்த மோதல் நிலையில் சீன ஊடகங்கள் ஏன் மோடியைப் பாராட்ட வேண்டும்?” என்றார்.
மேலும் இன்னொரு ட்வீட்டில் அவர் “முன்னாள் பிரதமரிடமிருந்து மிக முக்கியமான அறிவுரை வந்துள்ளது, பிரதமர் அதனை கேட்பார் என்று நம்புகிறோம். நாட்டுக்காக கேட்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார் ராகுல் காந்தி