

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
2ஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு கே.கே. வேணுகோபால் உதவி வரும் நிலையில், அவர் சிபிஐ வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன், 2ஜி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கே.கே.வேணுகோபால், தாம் நீக்கப்பட்டது தொடர்பாக வருவாய்த் துறை சார்பில் வந்துள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி, இனி இவ்வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என்றார்.
இதற்கு நீதிபதிகள், “எங்களுக்கு உங்கள் உதவி தேவை. மத்திய அரசிடம் நாங்கள் கூறுகிறோம். இதை எப்படி சொல்வது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் சிபிஐ வழக்கறிஞராக இல்லாவிட்டால், நீதிமன்றத்துக்கு வழக்கில் உதவுபவராக உங்கள் பணியை தொடரலாம்” என்றனர்.