தேசப் பாதுகாப்பிலும், பிராந்திய ஒருமைப்பாட்டிலும் சமரசம் செய்யாதீர்கள்: பாஜகவுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா: கோப்புப்படம்
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா: கோப்புப்படம்
Updated on
2 min read

தேசப் பாதுகாப்பிலும், எல்லைப்புற ஒருமைப்பாட்டிலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இது ராணுவத்துக்கு செய்யும் மிகப்பெரிய அவமதிப்பு என்று பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எல்லையில் இந்திய-சீன ராணுவம் மோதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலடி கொடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனப் படைகளுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக முதல் முறையாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று கருத்துத் தெரிவித்தார்.

அதில், “பிரதமர் மோடி அறிவிப்புகளை வெளியிடும்போது வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அதன் விளைவுகளையும், தேசப் பாதுகாப்பு, எல்லைப்புற நலன் ஆகியவற்றை மனதில் வைத்துப் பேச வேண்டும். ராஜதந்திரம், தீர்க்கமான தலைமை என்பது தவறான தகவல் தருவதில் இல்லை என்பதை நாங்கள் அரசுக்கு நினைவூட்டுகிறோம்” என மன்மோகன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்து பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கும், அவர் சார்ந்திருக்கும் கட்சியும் இந்திய ராணுவத்தைப் புண்படுத்துவதையும், அவர்களின் வீரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் தேசத்தின் ஒற்றுமை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள வேண்டும். சீன நடவடிக்கைகளைப் பற்றி மன்மோகன் சிங் கவலைப்பட வேண்டுமானால் ஒரு விஷயதுக்காக மட்டுமே கவலைப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்துச் சரணடைந்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை சீனா 600 முறை ஊடுருவல்களில் ஈடுபட்டது. இதற்காகத்தான் கவலைப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முக்கியமான அறிவுரை தெரிவித்துள்ளார். அந்த அறிவுரையை பிரதமர் மோடி தேசத்தின் நலனுக்காக அதை அமைதியாகப் பின்பற்றுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜே.பி.நட்டாவுக்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், “அன்புக்குரிய ஜே.பி. நட்டா மற்றும் பாஜக, தேசப் பாதுகாப்பிலும், எல்லை ஒருமைப்பாட்டிலும் சமரசம் செய்து கொள்வதை நிறுத்துங்கள். இது ராணுவத்துக்கும், 20 வீரர்கள் வீரமரணத்துக்கும் மிகப்பெரிய அவமதிப்பாக அமைந்துவிடும். அடிபணியாதீர்கள், சூழலுக்கு ஏற்ப எழுந்துவிடுங்கள். நாங்கள் அரசுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in