

ஜெயின் சமூகத்தினர் தங்களது விருப்பத்திற்காக இந்த மண்ணின் பிள்ளைகளை பழிக்க நினைக்க வேண்டாம் என்று இறைச்சி தடை விவகாரத்தில் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.
மேலும், "பிரச்சினைகளை கிளப்பும் முஸ்லிம்கள் செல்ல பாகிஸ்தான் என்ற நாடு இருக்கிறது. ஆனால், ஜெயின் சமூகத்தினர் இங்கு விட்டால் எந்த நாட்டுக்கு போவார்கள் என்று யோசிக்க வேண்டியது அவசியம்" என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் சிவசேனா வெளியிட்டுள்ள தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தத் தலையங்கத்தில், "ஜெயின் சமூகத்தினர் தங்களது சுயநலத்துக்காக மற்றவர்களை பழிக்க வேண்டாம். அவர்கள் முஸ்லிம்களை பின்பற்றி புதுப் புது சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம். முஸ்லிம்கள் வாழ, இந்தியாவை விட்டால் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் ஜெயின் சமூகத்துக்கு சென்று வாழ எந்த நாடு உள்ளது என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஜெயின் சமூகத்தினர், இந்த நாட்டின் சொந்த மக்களை பழித்து வாழ எண்ண வேண்டாம்.
மகாராஷ்டிராவில் ரவுடிகளிடமிருந்து ஜெயின் மக்களை பெரிய அளவில் சிவசேனா பாதுகாத்துள்ளது. அதற்காக மறைந்த தலைவர் பால் தக்கரேவுக்கு நன்றி கூற தெருவின் ஜெயின் மக்கள் குவிந்து நின்ற காட்சிகளும் வரலற்றில் உள்ளது. ஆனால் இவை அனைத்தையும் அவர்களால் எப்படி மறக்க முடிந்தது?
லஷ்கர் தீவிரவாதி கசாப் போல, யாரேனும் இந்த நோன்பு சமயத்தில் உள்ளே ஊடுருவினால், ஜெயின் சமூகத்தினர் யாரேனும் தங்களது உயிரை பணயம் வைத்து நாட்டை காப்பாற்றுவார்களா? அதற்கு இந்த மண்ணின் மைந்தர்கள் தான் வர வேண்டும்.
விலங்குகளை கொல்வது வன்முறை என்று சொல்ல முடியாது. இங்கு அதிகப்படியான கடைகளை ஜெயின் சமூகத்தினர் வாடகைக்கு விடுகின்றனர். அதன் மூலம் மாமூல் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நோன்பு நேரத்தில் மாமூல் வாங்காமல் அவர்களால் இருக்க முடியுமா என்ன? அது அவர்களுக்கு பாவமாக தெரியவில்லையா? " என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.