

லடாக்கில் கல்வான் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாக சீனா மற்றும் இந்தியா இடையில்
ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.
சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை, இரு நாட்டு உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தியாவின் நில எல்லைப் பகுதிகளிலும், வான்வெளி மற்றும் கடற்பகுதிகளிலும் சீனாவின் ஊடுருவல் ஏதும் இருக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீன ராணுவம் எந்தவிதமான அத்துமீறலில் ஈடுபட்டாலும் தகுந்த பதிலடி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருதரப்பில் ராணுவ குவிப்பு நடந்து வருகின்றபோதிலும் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண பேச்சுவார்த்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மோல்டோவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கல்வான் மோதலுக்கு தீ்ர்வு காண்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.