

கேரள மாநிலம், கொல்லத்தில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை காங்கிரஸ் தாமதப்படுத்தலாமே தவிர முடக்க முடியாது என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் உத்தி 2 வகையானது. தொந்தரவு செய்தல் மற்றும் தாமதப்படுத்துதல். ஆனால் அவர்களால் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ஒருபோதும் முடக்க முடியாது.
காங்கிரஸ் தோல்வி அடைந்த ஒரு ஆட்சியை மேற்கொண்டது, அதனால் வெற்றியடையும் எந்த ஒரு ஆட்சியையும் நடக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் செயல்பாடாக இருந்து வருகிறது.
இதனால்தான் காங்கிரஸ் கட்சியின் அரசியல், “இடையூறு அரசியல்” என்று கருதப்படுகிறது.
நடப்பு உலகப் பொருளாதாரம் பெரிய சவால்களை சந்தித்து வரும் நிலையில் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்று சிந்திப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். இந்தக் கட்டத்தில்தான் இந்தியாவுக்கு உள்ளார்ந்த வாய்ப்பு உள்ளது. இதனை இந்தியா இப்போதைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்பது பற்றிய பொதுக் கருத்தும், அரசியல் கருத்தும் நிலவுகின்றன. ஆனால் வருத்தம் தரும் விதமாக காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது” என்றார்.
மாதா அமிர்தானந்தமயி “தூய்மை இந்தியா” திட்டத்துக்காக ரூ.100 கோடிக்கான காசோலையை அருண் ஜேட்லியிடம் வழங்கினார்.