18 ஆண்டுகளில் இல்லாத அளவு: 16-வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு: டீசலுக்கு லிட்டர் 10 ரூபாய் வரை அதிகரிக்கிறது; அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அச்சம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 16-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் லிட்டருக்கு 33 பைசாவும், டீசல் லிட்டருக்கு 58 பைசாவும் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்துதான் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட 15 நாட்களுக்கு ஒருமுறை விலையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அப்போது இருந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு அனுமதியளித்தது.

அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நாள்தோறும் விலையை மாற்றி அமைக்கலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனுமதியளித்தது.

ஆனால் இதுநாள் வரை தொடர்ந்து 14 நாட்களுக்கும் மேலாக விலை உயர்ந்தது இல்லை. அவ்வாறு உயர்ந்தாலும் இதுபோல் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு அதிகபட்சமாக இருவாரங்கள் உயர்வாக லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே இருந்துள்ளது.

ஆனால், கடந்த 16 நாட்களாக தொடர்ந்து விலை உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.30 பைசா உயர்ந்துள்ளது, டீசல் லிட்டருக்கு ரூ.9.46 பைசா அதிகரித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து எந்த இரு வாரங்களிலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு முன் அதிகபட்சமாக டெல்லியில் 2018-ம் ஆண்டு பெட்ரோல் லிட்டர் ரூ.84 ஆக அதிகரித்தது, டீசல் லிட்டர் அதிகபட்சமாக ரூ.75.69பைசா கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி உயர்ந்தது. அதன்பின் அந்த விலை உயர்வைக் கடந்ததில்லை.

இன்றைய விலையின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.79.23 பைசாவிலிருந்து ரூ.79.56 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.78.27 பைசாவிலிரு்து ரூ.78.55 பைசாவாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.82.87 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.76.30 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மூன்றில் இருபங்கு வரி இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் உற்பத்தி, விற்பனை வரி அல்லது வாட் வரி போன்றவைதான் விலை உயர்வில் 60 சதவீதம் இடம் பெற்றுள்ளன.

பெட்ரோல் விலையில் 63 சதவீதம் அதாவது ரூ.50.69 பைசா வரியாகச் செலுத்துகிறோம். இதில் ரூ.32.98 மத்திய அரசுக்கு உற்பத்தி வரியாகவும், ரூ.17.71 பைசா மாநில அரசுகளுக்கு வாட் வரியாகவும் செலுத்துகிறோம்

டீசலில் ஒரு லிட்டர் விலையில் ரூ.49.43 பைசா அல்லது 63 சதவீதம் வரியாக மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இதில் உற்பத்தி வரியாக ரூ.32.98 பைசாவும், வாட் வரியாக ரூ.17.71 பைசாவும் இடம் பிடிக்கிறது.

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கழித்துவிட்டு மக்களுக்கு விற்பனைக்கு செய்தால் அதன் அடக்கவிலை லிட்டர் 25 ரூபாய்க்குள்ளாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் காலத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்காமல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் சுமையை மக்கள் மீது தொடர்ந்து 16-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றி வருகின்றன.

ஏற்கெனவே லாக்டவுன் சிக்கலால் லாரி உரிமையாளர்கள் நடத்த முடியாமல் பல்வேறு சிமரத்தில் தவித்து வருகின்றனர், தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது அவர்களை பெரிதும் சிரமத்தில் தள்ளும். மேலும், அவர்கள் தொடர்ந்து சரக்குப்போக்குவரத்தை இயக்கும்போது, கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், இதனால் சமானிய மக்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in