

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்தபடி மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கோவாவின் பனாஜியில் உள்ள பாஜக தொண்டர்களுடன் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவும் பிற உலக நாடுகளைப்போலவே கரோனாவைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பும் பின்னும் இந்தியாசந்தித்த சவால்களுடன் ஒப்பிட்டால் இந்த வைரஸ் தரும் பேரிடரும் நெருக்கடியும் பெரிதானதல்ல.
கரோனா வைரஸ் ஏற்படுத்தும் பேரிடர் ஒட்டுமொத்த உலகையே உலுக்குகிறது. இந்த பாதிப்பை சாபமாக பார்க்காமல் வரமாக பாவித்து கெட்டதிலும் நல்லது நடக்கும் என நம்புவோம். கரோனா வைரஸ் மீதான அச்சத்தை தவிர்ப்பதும் வருத்தப்படுவதை நிறுத்துவதும் இப்போதைய நிலையில் அவசியமானது. நம்பிக்கையை தளரவிடக்கூடாது.. எதிர்மறை சிந்தனைக்கு இடமே தரக்கூடாது. பொருளாதார நெருக்கடிகளை வீழ்த்தி வல்லரசாக இந்தியா பலம்பெறும்.
கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலகநாடுகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விஞ்ஞானிகள் விரைவில் மருந்து கண்டுபிடிப்பார்கள் என்றநம்பிக்கை உள்ளது. கரோனா வைரஸை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை ஆலோசனைகளை அனைவரும் பின்பற்றவேண்டும். இவ்வாறு கட்கரி கூறினார். பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்திலிருந்தபடி இணையதளம் வழியாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷேத் தனவடே உள்ளிட்டோரும் உரையாற்றினர்.