Published : 22 Jun 2020 07:13 AM
Last Updated : 22 Jun 2020 07:13 AM

உலகின் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

புதுடெல்லி

உலகின் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 6,450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுவரை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்று வந்த முகேஷ், தற்போதுஉலகின் 10 பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் லாறி எலிசன் மற்றும் பிரான்சின் பிரான்கோயிஸ் பெடென்கோர்ட் மெயர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 42 சதவீத பங்குகள் முகேஷ் அம்பானி வசம் உள்ளது. இந்நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குள்ள கடன் சுமைகள் குறைந்து வருகின்றன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழலில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் ரிலையன்ஸ்ஜியோ நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது. இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்தது. இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஜியோ பிளாட்பார்ம் சுமார் 1,500 கோடி டாலர் அளவுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதுதொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த முதலீட்டில் பாதி அளவாகும். ஃபேஸ்புக் இன்கார்ப்பரேஷன், ஜெனரல் அட்லான்டிக், சில்வர் லேக் பார்ட்னர், கேகேஆர் அண்ட் கோ, சவுதி அரேபியாவின் சாவ்ரின் வெல்த் பண்ட் ஆகியன ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவின் மொபைல் சந்தையில் 48 சதவீத சந்தையை அடுத்த 5 ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோ பிடித்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x