Published : 22 Jun 2020 07:11 AM
Last Updated : 22 Jun 2020 07:11 AM

கரோனா வைரஸ் சிகிச்சைக்கு ‘கோவிஃபார்’- மத்திய அரசு அனுமதியுடன் அறிமுகம் செய்தது ஹெட்ரோ நிறுவனம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் சிகிச்சைக்கு ‘கோவிஃபார்’ என்ற மருந்தை ஹெட்ரோ மருந்து நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவிய நிலையில் இந்தியாவிலும் அதன் பாதிப்புதீவிரமாகி உள்ளது. தொடர்ந்து வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்கு மருந்து வழங்குவதில் சவால்கள் நீடித்து வருகின்றன.

வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு ஆயுர்வேத மருந்துகளும், வழக்கமான பொது மருத்துவ மருந்துகளும் கொடுத்து வரும் நிலையில், தற்போது கரோனாவுக்கென பிரத்யேக மருந்து ஒன்றை ஹெட்ரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

‘கோவிஃபார்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மருந்து அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலீட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் (Gilead’s Remdesivir) மருந்தின் ஒரு வகையாகும். ரெம்டெசிவிர் மருந்துக்கு ஐரோப்பிய மருந்து ஆணையமும், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளன.

இந்நிலையில் இதன் ஒரு வகை மருந்தை இந்தியாவில் ஹெட்ரோ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இது 100 மில்லி கிராம் அளவுக்கு ஊசி மூலம் கொடுக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்து ஹைதராபாத்தில் உள்ள உற்பத்தி நிலையத்தில் தயார் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து ஹெட்ரோ நிறுவனத் தலைவர் பி.பார்த்தசாரதி ரெட்டி கூறும்போது, ‘‘தொடர்ந்து கரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் ‘கோவிஃபார்’ மருந்துக்கு கிடைத்துள்ள அனுமதி நெருக்கடி நிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எளிதில் கிடைக்கும் வகையில் உற்பத்தி திட்டமிடப்படும். வைரஸ் பாதித்த இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்களால் மட்டுமே வழங்கப்படும் வகையில் இந்த மருந்து கிடைக்கும். இன்னும் ஒரு வாரத்தில் மருந்து தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்” எனக் கூறினார்.

இந்த மருந்து ரூ.5,000 முதல் ரூ.6,000 முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும் மருந்தை நோயாளியின் அனுமதிக்குப் பிறகு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிலீட் நிறுவனத்திடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை ஹெட்ரோ நிறுவனம் மட்டுமல்லாமல் ஜூபிலன்ட் லைஃப்சயின்ஸ், மிலன், டாக்டர் ரெட்டிஸ், பயோகான், சைடஸ் கெடிலா உட்பட பல நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை அனுமதியைப் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மருந்து தயாரிக்கும்பட்சத்தில் 127 நாடுகளில் இந்த மருந்து கரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x