Last Updated : 21 Jun, 2020 05:08 PM

 

Published : 21 Jun 2020 05:08 PM
Last Updated : 21 Jun 2020 05:08 PM

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்புகளை 16 பிஹாரி ரெஜிமென்ட் படை எவ்வாறு அகற்றியது?- 3 மணி நேரம் நடந்த சண்டை குறித்த புதிய தகவல்கள் 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் அமைத்திருந்த ஆக்கிரமிப்புகளையும், அறிவிப்புப் பலகைகளையும், இந்திய ராணுவத்தின் 17 பிஹாரி ரெஜிமென்ட் படை எவ்வாறு அகற்றியது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சீன ராணுவத்தின் சார்பில் 350 வீரர்கள் இருந்தபோதிலும், 16 பிஹாரி ரெஜிமென்ட் படையில் இருந்த 100 வீரர்கள் அவர்களைச் சமாளித்து, அடித்து நொறுக்கி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன் ஷ்யோக், கல்வான் நதிக்கரையில் உள்ள ஜாப் லடாக் பகுதியில் உள்ள ஓய் சந்திப்பில் சீன, இந்திய ராணுவத்தி்ன் மூத்த அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

அப்போது இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அமைத்திருந்த ஒரு அறிவிப்புப் பலகையை நீக்க வேண்டும் என்று 16 பிஹாரி ரெஜிமென்ட் உள்ளிட்ட இந்திய ராணுவம் சார்பில் சீன ராணுவத்திடம் கோரப்பட்டது.

அந்த அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தங்கியிருக்கும் சீன ராணுவத்திடம் சென்று அறிவிப்புப் பலகையை நீக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அறிவுறுத்துவதற்கு பிஹார் ரெஜிமென்ட் உள்ளடங்கிய ராணுவம் சார்பில் சிறிய குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது.

சீன ராணுவத்திடம் சென்று, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆதலால், இந்தப் பலகையை அகற்றிவிட்டுச் சென்றுவிடவும் என்று ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்கு சீன ராணுவம் மறுத்து அங்கிருந்து செல்ல முடியாது என ராணுவம் உள்ளிட்ட 16 பிஹாரி ரெஜிமென்ட் படையினரிடம் தெரிவித்துள்ளனர், இதையடுத்து, அங்கு நடந்த சம்பவங்களைக் கூறி, பெரிய அளவில் படைகளை அனுப்பக் கோரிக் கேட்க பிஹாரி ரெஜிமென்ட் பிரிவினர் அதிகாரிகளைச் சந்திக்கத் திரும்பினர்.

இதையடுத்து, ராணுவத்தின் 50 வீரர்களும், 16 பிஹாரி ரெஜிமென்ட் பிரிவின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் சேர்ந்து சீன வீரர்கள் இருந்த இடத்துக்குச் சென்றனர்.

ஆனால், இந்திய வீரர்கள் திரும்பிச் செல்லும்போது 10 முதல் 15 சீன வீரர்கள் இருந்த நிலையில், இந்திய வீரர்கள் மீண்டும் வரும்போது அங்கு 300-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கூடிவிட்டனர்.

இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருப்பதால் அங்கிருந்து வெளியேறிவிடுமாறு பிஹாரி ரெஜிமென்ட் பிரிவினர் சீன வீரர்களிடம் எச்சரித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் திரும்பி வருவார்கள் என்பதால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கற்களையும், ஆயுதங்களையும் சீன ராணுவம் தயாராக வைத்திருந்தது. அப்போது அங்கு சென்ற ராணுவத்தின் 50 வீரர்களும், 16 பிஹாரி ரெஜிமென்ட் பிரிவின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் சீன ராணுவத்துடன் அமைதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நேரம் செல்லச் செல்ல இருதரப்புப் படைகளுக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதனால், 16 பிஹாரி ரெஜிமென்ட் படைகள், சீன ராணுவத்தினர் அமைத்திருந்த குடில்கள், பலகைகள் அனைத்தையும் பிய்த்துத் தூற வீசி எறியத் தொடங்கினர்.

இந்திய ராணுவ வீரர்களைத் தாக்க ஏற்கெனவே ஆயுதங்களைத் தயாராக வைத்திருந்த சீன ராணுவம், இந்திய ராணுவத்தின் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் 16 பிஹாரி ரெஜிமென்ட் கமாண்டிங் அதிகாரி, மற்றும் ஹவில்தார் பழனி, மீதுதான் முதல் தாக்குதலை சீன ராணுவம் நடத்தியது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த 16 பிஹாரி ரெஜிமென்ட் படையினர் சீன ராணுவத்தைப் புரட்டி எடுத்துள்ளனர்.

சீன ராணுவத்தினர் பக்கம் 300 முதல் 350 வீரர்கள் இருந்தபோதிலும் இந்தியாவின் தரப்பில் இருந்த 100 வீரர்கள் தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. சீன வீரர்களை பிஹாரி ரெஜிமென்ட் வீரர்கள் உருட்டி எடுத்துள்ளனர். கற்களை மழையாகப் பொழிந்து சீன வீரர்களை பிஹாரி ரெஜிமென்ட் வீரர்கள் அடித்து நொறுக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏறக்குறைய 3 மணிநேரம் வரை இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்தச் சண்டையில் சீன ராணுவ வீரர்கள் ஏராளமானோர் காயமடைந்தும், பலர் உயிரிழந்தும் மண்ணில் சாய்ந்தனர்.

ஆனாலும், அசராத 16 பிஹாரி ரெஜிமென்ட் படைப்பிரிவினர் சீன ராணுவம் அமைத்திருந்த குடில்கள், பதாகைகள், பலகைகள் அனைத்தையும் பிடுங்கி வீசி எறிந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்குப்பின், அப்பகுதி அருகே சீன ராணுவம் தனது படைகளைக் குவித்து வலிமைப்படுத்தியது.

எண்ணிக்கையில் அதிகமான சீன வீரர்கள் இருந்தபோதிலும், இந்திய ராணுவ வீரர்கள், 16 பிஹாரி ரெஜிமென்ட் படையும் சேர்ந்து ஒப்பந்தத்தை மீறி வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றின.

இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x