Last Updated : 02 Sep, 2015 09:04 AM

 

Published : 02 Sep 2015 09:04 AM
Last Updated : 02 Sep 2015 09:04 AM

இந்துத்துவா அமைப்புகள் கொலை மிரட்டல் எதிரொலி: கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவானுக்கு பலத்த பாதுகாப்பு

கர்நாடகாவில் எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக்கொல்லப் பட்ட நிலையில், மற்றொரு கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவானுக்கு பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத் துவா அமைப்புகள் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளன. இதனால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

மங்களூரு மாவட்டம் பண்டுவால் பகுதி பஜ்ரங் தளம் அமைப்பின் இணை செயலாளர் புவித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “அப்போது யு.ஆர்.அனந்தமூர்த்தி; இப்போது எம்.எம். கல்புர்கி; அடுத்த இலக்கு கே.எஸ்.பகவான்” என பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து, 2 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை ந‌டத்தி வருகின்றனர். இதைக் கண்டித்து, பஜ்ரங் தளம், ராம் சேனா ஆகிய அமைப்பினர் சார்பில் பண்டுவாலில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

இந்நிலையில் மைசூரு மகா ராஜா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், மூத்த கன்னட எழுத்தாளருமான பகவானுக்கு மங்களூருவைச் சேர்ந்த பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவரது வீட்டுக்கு ராம் சேனா அமைப்பின் பெயரில் மிரட்டல் கடிதமும் வந்துள்ளது.

இதனால் மைசூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த், பகவானின் வீட்டுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய‌ போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். மேலும் பகவானுக்கு தொலை பேசியில் மிரட்டல் விடுத்த‌தாக மைசூருவைச் சேர்ந்த ஹரீஸ் (24) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பகவான், 'தி இந்து'விடம் கூறியதாவது:

மக்களின் வாழ்வை சீரழிக்கும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், ஏழைகளை சுரண்டி பிழைக்கும் மடாதிபதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசிவருவதால் க‌டந்த 35 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் எழுதிய' சங்கராச்சாரியாரின் தத்துவங்கள்' என்ற நூலுக்கு கடும் எதிர்ப்பு வந்தது. இதேபோல கடவுளின் பெயரைச் சொல்லி கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மடாதிபதிகளை தோலுரிக்கும் கட்டுரையை எழுதியதற்காக தாக்கப்பட்டேன்.

எழுத்தாளர்களுக்கு விடுக்கப் படும் இத்தகைய கொலை மிரட்டல்களை அரசும், சமூகமும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதை ஒடுக்கும் எதிர் வினையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x