

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் தரப்பில் கூறப்படுவதாவது
''ஸ்ரீநகரில் உள்ள ஜூனிமார், ஜாதிபால் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை இரு பகுதிகளையும் பாதுகாப்புப் படையினர், ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினர் சுற்றி வளைத்தனர்.
போலீஸார் பல முறை கேட்டுக்கொண்டும் வீட்டுக்குள் இருந்து தீவிரவாதிகள் வெளியே வரவில்லை. பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நெருங்கியவுடன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நீண்டநேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அந்த 3 தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனும் அடையாளம் காணப்படவில்லை. இன்னும் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. அந்தப் பகுதி முழுவதும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்கள் வெளியே செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி விஜயகுமார் கூறுகையில், “தீவிரவாதிகளை சரண்டர் ஆகக் கோரி பலமுறை கேட்டுக்கொண்டோம். அவர்களின் பெற்றோர் மூலம் கூட கூறி சரண்டர் ஆகக் கோரினோம். ஆனால், அவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்கள்.
இதில் 3 தீவிரவாதிகளும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. இதில் இருவர் 2019 ஆம் ஆண்டிலிருந்து தீவிரவாத இயக்கத்தில் இருக்கிறார்கள். ஒருவர் கடந்த மாதம் பிஎஸ்எப் வீரர்கள் மீதான தாக்குதலோடு தொடர்புடையவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் தேடுதல் பணிகள் நடந்து வருவதால், மக்கள் வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.