

மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளால் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வந்த தஹவூர் ராணா, கடந்த 2009-ம் ஆண்டுகைது செய்யப்பட்டார். 2013-ல்ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானதால் உடல்நலம் குன்றிவிட்டதாகவும் கருணை அடிப்படையில் முன்னரே விடுவிக்குமாறும் ராணா மனு செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவர்கடந்த வாரம் லாஸ் எஞ்சலீஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் ராணாவுக்கு தொடர்பு உள்ளதுஎன்றும் அவரை ஒப்படைக்கும்படி இந்தியா விடுத்துள்ள கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும் லாஸ் ஏஞ்சலீஸ் மாவட்ட நீதிபதியிடம் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறையிலிருந்து வெளியே வரும் முன்னரே இந்தியா விடுத்திருந்த கோரிக்கையின்படி கடந்த 10-ம் தேதி ராணா மீண்டும் கைது செய்யப்பட்டார் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
ராணாவின் ஜாமீன் மனு மீதானவிசாரணை வரும் 30-ம் தேதிநடைபெறும் என அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வரும் 26-ம் தேதிக்குள் அமெரிக்க அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘11 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராணாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்த விசாரணை இனி நடைபெறும்’ என்று தேசியபுலனாய்வு அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரை கைது செய்வதற்கான உத்தரவை தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் 2018 ஆகஸ்ட்டில் பிறப்பித்தது.