

கர்நாடக சட்டமேலவையில் (எம்எல்சி) காலியாக உள்ள 7 இடங்களுக்கு ஜூன் 29-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் என்.நாகராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய இவர், பாஜகவில் இணைந்தார்.
என்.நாகராஜ் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவையும், தனது சொத்து கணக்கையும் தாக்கல் செய்தார். அதில், தான் எம்.டி.பி, சபரி ஆகிய நிறுவனங்கள் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவரது பெயரில் உள்ள 155 வங்கி கணக்குகளில் ரூ.144.41 கோடி பணம் நிலையான வைப்பாக உள்ளது. இவரது மனைவியின் 42 வங்கி கணக்குகளில் ரூ.34.08 கோடி நிலையான வைப்பாக உள்ளது. இது தவிர என்.நாகராஜ் எம்.டி.பி நிறுவனத்தில் ரூ.9.5 கோடியும், சபரி நிறுவனத்தில் ரூ.2.1 கோடியும் முதலீடு செய்துள்ளார். என். நாகராஜிடம் உள்ள 5 கார்களின் மதிப்பு ரூ.2.48 கோடி, அவரது மனைவியின் கார் மதிப்பு ரூ.1.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது என். நாகராஜின் சொத்துமதிப்பு ரூ.1,189 கோடியாக இருந்தது. இப்போது அவரது சொத்துமதிப்பு ரூ.1,222 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமேலவைத் தேர்தலில் என். நாகராஜ் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், அவர் கர்நாடகாவின் பணக்கார எம்எல்சியாக இருப்பார். அதே போல அவருக்கு எடியூரப்பா ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி அமைச்சர் பதவியும் வழங்க இருப்பதாகவும் என தகவல் வெளியாகியுள்ளது.