

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு விரைவு பரிசோதனை கருவிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 நிமிடங்களில் முடிவுகளை அறிய முடியும். நோய் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் விரைவான, நம்பகத்தகுந்த மற்றும் மலிவான சோதனை அவசியமாகிறது. இந்த கருவிகளை பயன்படுத்தி டெல்லியில் வியாழக்கிழமை பரிசோதனை தொடங்கியது. முதல்நாளில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் பரிசோதனையில் ஈடுபட்டன.
டெல்லியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 450 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உறுதி செய்யப்படாத ஆனால் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மீண்டும் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும். விரைவு பரிசோதனை கருவிகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால் டெல்லிக்கு இன்னும் 10 நாட்களில் 71 லட்சம் கருவிகள் பரிசோதனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.