லாக் டவுன் ஒன்றும் அவசரநிலைப் பிரகடனம் அல்ல,  ஜாமீன் வழங்கத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

லாக் டவுன் ஒன்றும் அவசரநிலைப் பிரகடனம் அல்ல,  ஜாமீன் வழங்கத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

மத்திய அரசு அறிவித்த லாக் டவுன் உத்தரவு அவசரநிலைப் பிரகடனம் அல்ல ஆகவே குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் உரிமை உண்டு, அதனை மறுக்கவோ, திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அசோக் பூஷன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு ‘தவறு’ என்று தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றம் லாக்டவுனைக் காரணம் காட்டி குற்றம்சாட்டப்பட்டவருக்கு தானாகவே கிடைக்க வேண்டிய ஜாமீனை மறுத்தது செல்லுபடியாகாது, ஏனெனில் இது ’தெளிவாக பிழையான தீர்ப்பு, சட்டத்துக்குட்பட்டதல்ல’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்காக எமர்ஜென்சி கால ஜபல்பூர் வழக்கு ஒன்றை உதாரணமாக நீதிபதி குறிப்பிட்டு பிற்போக்கானது என்று அந்தத் தீர்ப்பை வர்ணித்து வாழ்க்கைக்கான உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை முறையான சட்ட நடைமுறைகள் இல்லாமல் அகற்றி விட முடியாது, ஒருவருக்கு மறுக்கப்படலாகாது.

அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 21-ஐ கண்டுகொள்ளாமல் ஜபல்பூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிற்போக்காகத் தீர்ப்பளித்தது, ஆனால் இதனை திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றம் மீண்டும் உரிமையை நிலைநாட்டியது என்றார் அசோக்பூஷன்.

“எனவே உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வு அரசு அறிவித்த லாக்டவுன் உத்தரவை, அவசரகால பிரகடனமாக எடுத்துக் கொண்டது பெரிய தவறு என்று நாங்கள் தெளிவாகக் கருதுகிறோம். குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது பிழையானது, சட்டபூர்வமானதல்ல” என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ரூ.10,000 பிணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in