‘ராகுல் காந்தி அரசியல் செய்யக்கூடாது’ - ராணுவ வீரர் தந்தையின் வீடியோவை வெளியிட்டு அமித் ஷா பதில்

‘ராகுல் காந்தி அரசியல் செய்யக்கூடாது’ - ராணுவ வீரர் தந்தையின் வீடியோவை வெளியிட்டு அமித் ஷா பதில்
Updated on
1 min read

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் எய்திய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களில் இறங்கியுள்ளது.

குறிப்பாக பிரதமர் மோடி நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘எல்லையில் இந்தியப் பகுதிக்குள் யாரும் நுழையவில்லை’ என்று கூறியதையடுத்து ப.சிதம்பரம், ராகுல் காந்தி, சோனியா காந்தி, மணீஷ் திவாரி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

யாருமே உள்ளே நுழையவில்லை எனில் ஏன் 20 ராணுவ வீரர்கள் பலி? ஏன் ராணுவ மேஜர்கள் மட்ட இருதரப்புப் பேச்சு? அங்கு என்னதான் நடக்கிறது? என்று ஏகப்பட்ட கேள்விகளை முன்வைத்தனர்.

ராகுல் காந்தி, தன் ட்வீட்டில் சீனாவின் ஆவேசத்துக்கு பிரதமர் மோடி இந்தியப் பகுதியை ஒப்படைத்து விட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர் ஒருவரின் தந்தை பேசும் வீடியோவை வெளியிட்டு ”தைரிய ராணுவ வீரனின் தந்தை பேசுகிறார், அவர் ராகுல் காந்திக்கு தெளிவுபடுத்துகிறார்” என்று கூறி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தந்தை கூறும்போது, “இந்திய ராணுவம் வலுவானது, சீனாவை வெல்ல முடியும். இதில் ராகுல் காந்தி அரசியல் செய்யக்கூடாது. என் மகன் ராணுவத்தில் சண்டையிடுகிறான். தொடர்ந்து நாட்டுக்காக சண்டையிடுவான், அவன் விரைவில் குணமடைய நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இந்த வீடியோவை தன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அமித் ஷா, “தைரிய ராணுவ வீரரின் தந்தை பேசுகிறார், இவர் ராகுல் காந்திக்கு தெளிவான செய்தி ஒன்றை தெரிவிக்கிறார். இந்த நேரத்தில் நாடுமுழுதும் ஒற்றுமையாக இருக்கும்போது ராகுல் காந்தியும் சிறுமை அரசியலை விடுத்து உயர வேண்டும். தேச நலனுக்காக ஒற்றுமையுணர்வுடன் அவர் செயல் பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in