

ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் பன்னாட்டு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்றைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனைச் சுட்டு வீழ்த்தினர்.
இன்று காலை 5.10 மணியளவில் பிஎஸ்எப் வீரர்கள் ரோந்துப்பணியில் இருந்த போது ட்ரோன் பறப்பதைக் கண்டனர்.
கண்டவுடன் 9 முறை ட்ரோன் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ட்ரோன் இந்தியப் பகுதியில் 250 மீ உள்ளே விழுந்தது.
மூத்த போலீஸ் அதிகாரிகள், பிஎஸ்எஃப் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
இதோடு இன்று காலை 8.50 மணியளவில் ஹிராநகர் செக்டாரில் பபியா முகாம் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சர்வதேச எல்லையை பாதுகாத்து வரும் பிஎஸ்எஃப் வீரர்கள் இதற்குப் பதிலடி கொடுக்கவில்லை. சூழ்நிலை நெருக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீஸார் பாகிஸ்தான் ட்ரோன் தொடர்பாகக் கூறும்போது பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் அளிக்கும் முயற்சியாக ட்ரோன் இயக்கபப்ட்டிருக்கலாம் என்றனர்.
இந்த ட்ரோன் 8 அடி அகலாமானது. பனேசார் முகாமுக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் முகாமிலிருந்து இதனை இயக்கியிருக்கலாம்.
6 மாதங்களுக்கு முன்பாக ஒரே தயாரிப்பான ஆயுதங்களை பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றினோம். இதே போல் இங்கிருந்து ஆயுதங்களை தீவிரவாதிகள் கொண்டு செல்லும் முயற்சிகளையும் குப்வாரா, ரஜவ்ரி, ஜம்மு பிரிவுகளில் முறியடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.