Published : 20 Jun 2020 08:02 AM
Last Updated : 20 Jun 2020 08:02 AM

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசனம்: ஆன்லைனில் கூடுதல் டிக்கெட்; சூரிய கிரகணத்தால் நாளை தரிசனம் ரத்து

கரோனா தொற்று பரவலை தடுக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தரிசனம் கடந்த 11-ம் தேதிமுதல் மீண்டும் தொடங்கியது.

அனைத்து தரப்பு பக்தர்களும் ஏழுமலையானை தரிசிக்க தொடங்கினர். இதற்காக தினமும் இலவச தரிசனத்துக்கு திருப்பதியிலேயே 3 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம் 3,000 பக்தர்களும் ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் மூலம் தினமும் 3,000 பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும், விஐபி பக்தர்களுக்காக 500 டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன்படி ஒரு நாளைக்கு மொத்தம் 6,500 பக்தர்கள் சுவாமியை தரிசித்து வந்தனர்.

தற்போது இலவச தரிசனத்துக்கு சுமார் 10 நாட்கள் வரைகாத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ.300 சிறப்புதரிசன டிக்கெட்களை தேவஸ்தானம் நேற்று முன்தினம் இரவு முதல் தினமும் கூடுதலாக 3,000 டிக்கெட்டுகளை வெளியிட்டது. இதனால் நேற்று முதல் தினமும் 10,000 பக்தர்கள் சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சூரிய கிரகணம் நாளை காலை 10.18 மணி முதல் மதியம்1.38 மணி வரை ஏற்படுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை மதியம் 2.30மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி சுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், கல்யாண உற்சவம் உட்பட ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி நாளை முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் இலவச அன்ன பிரசாத வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் நாளை முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x