Published : 20 Jun 2020 06:59 AM
Last Updated : 20 Jun 2020 06:59 AM

கல்வான் பள்ளத்தாக்கில் மோதலின்போது சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்களை விடுவித்தது சீனா: படைகளை வாபஸ் பெறுவது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின்போது சிறை பிடிக் கப்பட்ட 10 இந்திய வீரர்களை பேச்சு வார்த்தைக்கு பிறகு சீனா நேற்று முன்தினம் விடுதலை செய்தது. அதன் தொடர்ச்சியாக படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக அடுத்த சுற்று பேச்சு நடந்தது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பகுதி காஷ்மீரின் கார கோரம் பகுதியில் இருந்து அருணா சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவு கொண்டது. ஒட்டுமொத்த எல்லை நெடுகிலுமே சீனாவுடன் எல்லை பிரச்சினை நீடிக் கிறது. குறிப்பாக லடாக், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேச எல்லை பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அடிக்கடி அத்துமீறுவதும் இந்திய வீரர்களின் ரோந்துப் பணியை தடுப்பதும் வாடிக்கையாக உள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பேக் ஒல்டி, பான்கோங் ஏரி பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது. அதில் சில வீரர்கள் காய மடைந்தனர்.

அப்போதிலிருந்தே எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் வீரர் களை குவித்து வந்தன. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே ராணுவ மற்றும் தூதரக நிலையில் 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு, எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இரு தரப்பும் வாபஸ் பெறத் தொடங்கின.

இந்நிலையில், பின்வாங்கிச் சென்ற சீன வீரர்கள், ரோந்து முனை 14-ல் தற்காலிக கூடாரம் அமைக்கத் தொடங்கினர். இதனால், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15-ம் தேதி இரவு இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.

ஆணிகள் பதித்த கட்டைகள், இரும்புக் கம்பிகளால் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உட்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சிலர் காயமடைந்தனர். சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாயின.

மேலும், இந்திய வீரர்கள் சிலர் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால், மோதல் நிகழ்ந்த அன்று எல்லையில் பணியில் இருந்த வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று நேற்று முன்தினம் இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதற்கிடையே, எல்லைப் பிரச் சினை மற்றும் மோதல் தொடர்பாக இரு நாடுகளும் மேஜர் ஜெனரல் நிலையில் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. நேற்றுமுன்தினம் லே பகுதியில் உள்ள தரைப்படைப் பிரிவு கமாண்டர் மேஜர் ஜெனரல் அபிஜித் பாபட், சீன ராணுவ தரப்பின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத் தினார். அதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், ஜூன் 15-ம் தேதி நடந்த மோதலின்போது சிறை பிடித்துச் சென்ற 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்களை சீனா நேற்று விடுதலை செய்தது.

அதை தொடர்ந்து படை வீரர்களை இருதரப்பும் வாபஸ் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கில் மேஜர் ஜெனரல்கள் நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x