Last Updated : 19 Jun, 2020 05:40 PM

 

Published : 19 Jun 2020 05:40 PM
Last Updated : 19 Jun 2020 05:40 PM

எல்லை மோதல்; தேசியவாதக்தைக் குறைத்துக் கொள்ளுங்கள; சீனப் பொருட்கள் புறக்கணிப்பை ஆதரிக்காதீர்கள்: மத்திய அரசுக்கு தேவகவுடா அறிவுறுத்தல்

முன்னாள் பிரதமர் தேவகவுடா : கோப்புப்படம்

பெங்களூரு

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய -சீன ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரத்தில் தேசியவாதக் குரலை மத்திய அரசுக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் எனும் குரலையும் ஆதரிக்கக்கூடாது என்று முன்னாள் பிரதமரமும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடா அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கல்வானில் இந்தியா-சீனா மோதல் தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் அவர் பங்கேற்க மாட்டார் என்று அவரின் அலுவலகம் தெரிவிக்கிறது.

இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு செயல்பட வேண்டிய விதம் குறித்தும், எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டியது குறித்தும் தேவகவுடா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் பேசி ஆலோசிக்க பிரதமர் மோடி அனைத்துக் கூட்டத்தைக் கூட்டியதை நான் வரவேற்கிறேன். தேச நலனுக்காகவும், விவாதங்களுக்கும் பல கட்சி சூழலை உறுதிப்படுத்தியுள்ளதால் சில பரிந்துரைகளை, ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைமறந்து அமைதியற்ற முறையில், கட்டுப்பாடற்ற முறையில் பேசிவிடக்கூடாது. கூட்டுறவுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியலையும், தேசப் பாதுகாப்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது.

இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகள் யாரும் ஆளும் அரசைக் கேள்வி கேட்காதீர்கள் என்று அர்த்தம் அல்ல. மிகப்பெரிய பங்களிப்பு நமக்கு இருப்பதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.

இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டில் சீனாவுக்கு எதிரான குரல் வலுத்து வருகிறது. சீனாவைப் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த கோஷத்தை மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது. அவ்வாறு ஆதரித்து ஊக்கப்படுத்தினால், அதன் தாக்கம் மிகவும் ஆழமாக இருக்கும். நடைமுறைக்கு ஏற்ற வழியில், யதார்த்தத்தின் வழியில்தான் நாம் நடக்க வேண்டும்.

குறிப்பாக இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் தேசியவாதத்தின் குரலை குறைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த விவகாரத்தை மேலும் நாம் பெரிதாக்கிவிடக்கூடாது. ஆத்திரத்தையும், கோபத்தையும், பழிவாங்கும் உணர்வையும் தூண்டுவது போல் பேச இந்த நேரம் உகந்தது அல்ல.

ஊடகங்களில் சில உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புகிறார்கள், விளம்பரங்களைத் தேடுகிறார்கள். கடந்த 1996-ம் ஆண்டு பிரதமராக நான் இருந்தபோது, சீனாவுடன் செய்த ஒப்பந்தத்தில் வீரர்கள் சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், ஏதாவது சிறிய மோதல் ஏற்பட்டாலும் உடனடியாக ஆலோசனை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் வருவது வேதனையளிக்கிறது. அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

அதாவது பிராதானமான எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், செய்திகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை.

எல்லையில் சீன - இந்திய ராணுவத்துக்கு இடையே என்ன நடந்தது, களச்சூழல் என்ன, இரு தரப்பு பேச்சுவார்த்தை நிலை என்ன என்பது குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், நிர்வாகரீதியில் ஒரு அதிகாரி ஆகியோர் விரிவான அறிக்கையைத் தயாரித்து எதிர்க்கட்சிகளுக்கு வழங்கிட வேண்டும்.

இந்த அறிக்கை இருந்தால் மட்டும்தான், அரசுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே கருத்துகளைப் பிரமாறிக்கொள்வது அர்த்தகமுள்ள வகையில் இருக்கும். தகவல்களை வகைப்படுத்த இந்தக் கோரிக்கை வைக்கவில்லை. உண்மைத் தகவல்களுக்காக மட்டுமே இது வைக்கப்படுகிறது.

இந்தியாவைச் சற்றி பகை நாடுகள் உள்ளதாக ஒரு உணர்வு எழும்போது, அரசியல் தலைவரின் முக்கியமான கடமை என்பது, அந்த அச்ச உணர்வை சரியான தகவல்கள் மூலம் போக்குவதாகும். எல்லா நேரங்களிலும் தேசத்துக்குச் சில தகவல்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

தேசம் தொடர்பான சில முன்னேற்றங்களைக் குறைத்து மதிப்பிடுவதும் மற்றும் சில தகவல்களை மிகைப்படுத்துவதும் நீண்ட காலத்திற்கு மதிப்பிடும்போது மோசமான உத்தியாகவே இருக்கும்.

சமீபகாலமாக ராணுவத்தை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்பார்க்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இது ஆபத்தானது. ராணுவத்தினரை தேசப்பணியாற்றும் செயலுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். ராணுவத்தினர் தொழில்முறையாகச் செயல்படும் போது, அவர்கள் அரசுக்கு அச்சமின்றி அனைத்துத் தகவல்களையும் சரியாகத் தெரிவித்து ஆலோசனை வழங்குவார்கள்.

எல்லையில் இந்திய வீரர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து விசாரித்து சரியான தகவல்ளையும், உண்மையில் என்ன நடந்தது என்பதையும் தெரிவிப்பதும் அவசியம்''.

இவ்வாறு தேவகவுடா தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x