வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் அஞ்சலி

வீர மரணம் அடைந்த வீரர் கணேஷ் ராமின் உடலை விமானநிலையத்தில் சுமந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
வீர மரணம் அடைந்த வீரர் கணேஷ் ராமின் உடலை விமானநிலையத்தில் சுமந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
Updated on
2 min read

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில்ல் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரின் உடலை தனது தோளில் கண்ணீருடன் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்துள்ளார்

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு முதல்வராக பூபேஷ் பாகல் இருந்து வருகிறார்.

கடந்த திங்கள்கிழமை கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனத் தரப்பிலும் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது என்றாலும் அதை வெளியே சொல்ல அந்நாட்டு ராணுவம் மறுக்கிறது

வீரமரணம் அடைந்த வீரரின் உடலை கண்ணீருடன் சமந்த முதல்வர் பூபேஷ்
வீரமரணம் அடைந்த வீரரின் உடலை கண்ணீருடன் சமந்த முதல்வர் பூபேஷ்

இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 வீரர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் ராம் குஞ்சம் என்ற ராணுவ வீரர் இந்த தாக்குதலி்ல் வீரமரணம் அடைந்தார். கான்கேர் மாவட்டம், கிதாலி குருதோலா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் ராம், கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாக ராணுவத்தில் இருந்து வந்தார். இந்த தாக்குதலில் கணேஷ் ராம் வீரமரணம அடைந்ததையடுத்து, அவரின் உடல் விமானம் மூலம் ராய்ப்பூர் நகருக்கு நேற்று வந்தது.

வீமரணம் அடைந்த கணேஷ் ராம் உடலுக்கு மரியாதை செலுத்த விமான நிலையத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் காத்திருந்தார். விமானத்தில் இருந்து கணேஷ் ராம் உடல் இறக்கப்பட்ட உடன், தான் மாநில முதல்வர் என்றும் பாராமல், ராணுவ அதிகாரியை விலக்கிவிட்டு, முதல்வர் பூபேஷ் பாகல் கணேஷ் ராம் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தனது தோளில் சுமந்து சென்றார். இந்த காட்சியைப் பார்த்த மற்ற அதிகாரிகள் நெகிழ்ந்து போயினர்.

அதன்பின் விமான நிலையத்தில் கணேஷ் ராம் உடலுக்கு மலர்வளையம் வைத்து, முதல்வர் பூபேஷ் பாகல் மரியாதை செலுத்தினார். அதன்பின் தனி ஹெலிகாப்டர் மூலம் கணேஷ் ராமின் சொந்த கிராமத்துக்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கணேஷ் ராம் வீரமரணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் பூபேஷ் பாகல், “ கணேஷ் ராம் நினைவாக, கிதாலியில் உள்ள பள்ளிக்கு அவரின் பெயர் சூட்டப்படும். கணேஷ் ராம் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பி்ல நிவாரணமாக ரூ.20 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும்” என அறிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in